Amusingly Simple

A blog by Deepak Venkatesan

Archive for the ‘சென்னை’ Category

சென்னை மழைச் சுற்றுலா

10 comments

சென்னையில் அழகான மழை! மழை என்றாலே சென்னை மிகவும் சுவாரஸ்யமாகி விடுகிறது. தெருவெல்லாம் கண்ணாடிகளாகி விடுகின்றன. கொஞ்சமாக பைக் சறுக்குகிறது. எல்லோரும் நத்தைகள் போல நின்று நின்று கவனமாக சாலைகளில் செல்கிறார்கள். குடைகள் இல்லாதவர்கள் தெருவில் ஓட்டம் பிடிக்கிறார்கள். தொப்பலாக நனைந்தும், வீரமாக வண்டியோட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். கார்களில் விருட்டெனப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள், இப்போது கார்களைச் செலுத்திக்கொண்டு, முன்னால் அதீத ஜாக்கிரதையுடன் செல்கிற சைக்கிள்காரனைப் பின்தொடர்ந்து, மெதுவாக மெதுவாக பவனிவருகிறார்கள். ஆட்டோக்கள் ‘நானே ராஜா’ என்று பாகுபாடில்லாமல் எல்லோர் மீதும் தண்ணீரை வாரியிறைத்து ‘ட்டப்பட்ட ட்டப்பட்ட’ என்று மோட்டார் புகை கக்க முன்னேறிச் செல்கிறார்கள். மஞ்சள், சிகப்பு, நீலம், கறுப்பு என்று கலர்கலராக ‘ஜெர்க்கின்’கள் அணிந்தவர்கள் பைக்குகளில் ஹீரோக்களாக பவனி வருகிறார்கள்.

இந்த சுவாரஸ்யமான (interesting) காட்சிகளெல்லாம் மழை வந்தால்தானே பார்க்க முடிகிறது. கொஞ்சம் கவனத்துடன் வண்டியைச் செலுத்த வேண்டும். எகிப்து மம்மிகள் போல் முற்றும் மூடிய ரெயின்கோட் அணிய வேண்டும். நிறைய பொறுமை வேண்டும். புஷ்டியான தேகம் வேண்டும். அவ்வளவு தான். இப்போது நீங்கள் சென்னை மழைச் சுற்றுலாவிற்கு ரெடி. நீங்கள் என்னைப்போல் இல்லாமல் எலும்பும் தோலுமாக இருந்தால், கிளம்பாதீர்கள். சென்னை சாலைகளின் மேடு பள்ளங்களில் உருண்டு பிரண்டு எழுந்து வருகிற பயிற்சி இது. திரும்பும் வரையில் திடகாத்திரமாகத் தாக்குப்பிடிப்பது அவசியம்.

சென்னை மழையில் வண்டி (two-wheeler) ஓட்டுவதற்குக் கொஞ்சம் ஆபத்தான சாலைகளில் அண்ணாசாலை முக்கியமானது. வழவழவென்று தார் போட்டிருப்பதால், வண்டி அருமையாக வழுக்கும். எப்போதும் மழை கொட்டிக்கொண்டே இருப்பதால், எல்லோரும் கண்களை மூடியபடி தான் வருவார்கள். ஆட்டோக்களுக்கு ‘சடன் பிரேக்’ அவார்டு கொடுக்கலாம். உங்கள் வண்டியின் பிரேக்குகளைத் தீட்டி வைத்துக் கொள்வது அவசியம். முன்னால் செல்பவர்களுக்கு முன்னால் செல்பவர்களுக்கு முன்னால் இருக்கிற வண்டியில் சிகப்பு விளக்கு தெரிந்தவுடன் பிரேக்கைப் பிடிக்க வேண்டும். இது முக்கியமானது. உங்களின் reflex reaction நேரத்தைப் பரிசோதிக்கும் பயிற்சி இது. சென்னையில் சாதாரண காலங்களிலும் இது அவசியம் என்றாலும், மழைக் காலங்களில் இது வீர விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனாலும் ஆபத்துகளைத் தாண்டி நம் கவனத்தைக் கவருகிறவர்கள், சின்னச் சின்ன பள்ளிக் குழந்தைகள். அவர்களுக்காகவே சின்னஞ்சிறிய வடிவத்தில் செய்யப்பட்ட ‘மிக்கி மவுஸ்’ ரெயின்கோட்டுகளை அணிந்து, வண்டிகளின் பின்னால், தன் தாய் அல்லது தந்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வருகிற குழந்தைகள் – கவிதைகள். இன்னும் தன் அம்மாவின் கைவிரல்களைப் பற்றிக்கொண்டு, தலையில் குடை போன்ற தொப்பிகளை அணிந்து கொண்டு, பள்ளிச் சீருடையில் பவனி வரும் குட்டிகள் மேலும் அழகு. அவர்கள் ரோட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ‘ச்சபக் ச்சபக்’ என்று குதித்து பின்னால் வருகிற அம்மாவை டென்ஷன் ஆக்குவது அழகோ அழகு!

சென்னை மழையில் தான் எத்தனை அழகு!

எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிற A/c-க்குக் கொஞ்சம் விடுமுறை. சென்னை வீடுகளில் எங்கோ முடங்கிக் கிடந்த கம்பளிகளுக்குக் கொஞ்சம் கவனிப்பு, போட்டி. எப்போதும் சுமை சுமையாகப் புத்தகங்களைத் தூக்குகிறப் பிஞ்சுகளுக்குக் கொஞ்சம் லீவ். வீட்டில் அமைதியாக மெகா சீரியல் பார்த்து அழுகிற அம்மாக்க
ுக்குக் அழுவதற்கு வேறு கொஞ்சம் சுவாரஸ்யமான காரணங்கள். மழைக்கு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றவர்களின் செல்பேசிகளுக்குக் கொஞ்சம் ஓவர்டைம். நீர் தேங்கி நிற்கும் சாலைகளால், மாநகராட்சிக்குக் கொஞ்சம் கெடுபிடி. கூரை வீடுகளில் வாழ்கிறவர்களுக்குக் கொஞ்சம் ஒழுகல். மருத்துவர்களிடத்தில் கொஞ்சம் அதிகமாகவே கூட்டம். மருந்துக் கடைகளுக்குக் கொஞ்சம் கொண்டாட்டம்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய சுவாரஸ்யங்கள். சென்னையில் அழகான மழை!

Written by Deepak

October 28th, 2006 at 8:14 pm

இஞ்சினீயரிங் கல்லூரி

2 comments

ஒரு நாளைக்கு 30 மணி நேரம் இருந்தால் கூடத் தேவலாம். கல்லூரி project work-இன் அடங்காத் தாண்டவங்களுக்கிடையே எழுதுவதற்கு சமயம் கிடைப்பது – கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைப்பது போல் ஆகிவிட்டது. இப்போது பருவமழை – அதுதான் எழுத சமயம் வாய்த்தது. எழுதுகிறேன்… நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அப்பாவித்தனமான ஃபர்ஸ்ட் இயர் பையனாக கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து, பல சமாசாரங்களிலும் மேதாவிலாசம் பெற்று 'அடப் பாவி!' த்தனமான ஃபைனல் இயராக உருமாறியிருக்கும் இன்று வரையில் நான் செய்ததெல்லாம், சில foreign author-களும், பலப்பல லோக்கல் author-களும் புத்தகம் என்கிற பெயரில் எழுதித்தள்ளிய விஷயங்களை உருபோட்டு, எக்ஸாம் என்கிற 'நையாண்டி தர்பாரி'ல் அதை வாந்தி எடுத்துப் பாஸ் செய்தது தான். இந்த வெட்டி வேலைக்கு எனக்கு இஞ்சினீயரிங் பட்டம்! ஒரு ரேடியோவைக் கூடத் திறந்து பார்த்த அனுபவம் இல்லை எனக்கு. இதில் கம்யூனிக்கேஷன் இஞ்சினீயராம் – கஷ்ட காலம்! நான்கு ஆண்டுகள் ஒரு பொறியியல் கல்லூரியி வளாகத்தில் நானும் தினம் தினம் நடமாடியிருக்கிறேன் என்கிற அனுபவத்தில் சில விஷயங்கள் (யோசனைகள்) சொல்கிறேன். 1. கிணற்றுக்குள் இருந்து பேசுவது போன்ற குரலை உடைய நபர்களை professor-களாக அமர்த்துவதைக் கல்லூரிகள் மறுபரிசீலனை செய்யலாம். அல்லது அந்நபர்களே, சமூக அக்கறையோடு, ஆசிரியர் தொழிலிருந்து வேறு வேலை பார்த்துச் செல்லலாம் – நிச்சயமாக மாணவர் சமூகம் அவர்கள் 100-ஆண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கும். 2. லோக்கல் author என்கிற பேரில், சகட்டு மேனிக்கு கண்டதையும் எழுதும் சமூக விரோதிகள் மீது 'பொடா', 'எஸ்மா', 'நக்மா' என்று ஏதாவது பெயரில் சட்டம் போட்டு, அவர்களை உள்ளே தள்ள அரசாங்கம் யத்தனிக்கலாம். மொழிக் கொலை செய்வதைத் தடுக்க இ.பி.கோ.-வில் புது செக்ஷன்களை உருவாக்கலாம். ஒரு படு லோகல் author-இல் இருந்து சின்ன துணுக்கு இதோ: "In simple words, motivation can defined as the process of inducing the people inner drives and the action towards certain goals and committing his energies towards achieve of these goals" (நான் டைப் செய்ததில் தவறு இல்லை என்பதை கவனத்தில் கொள்க!) 3. கெமிக்கல் lab என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கம்ப்யூட்டர் lab-இல் கூட lab coat அணிந்து தான் உள்ளே வர வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனங்களை எதிர்காலத்திலாவது திருத்திக் கொள்ளலாம். 4. ஒரு சில equation-களையும், foreign author-களிலிருந்து ஒரு சில வரிகளையும் ஒவ்வொரு நாளும் மனப்பாடம் செய்து கொண்டு வந்து, கிளாஸ் முன் சிலை போல் நின்று ஒப்பிக்கும் வாத்தியார்கள்/ வத்தியாரினிகள், திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் எங்கு நடக்கின்றன என்று தேடுவதைத் தொழிலாகக் கொள்ளலாம். 5. கல்லூரியில் symposium, காலேஜ் டே, இத்யாதிகள் என்றால், புடவை கட்டிக் கொண்டு வரும் இளம்யுவதிகள், எல்லாம் தெரிவது போல் படுகுட்டையாக (skimpy) ஸீ த்ரூ ரவிக்கையும், லோ ஹிப்பில் சேலையும் கட்டி, இடுப்பசைத்து, படு செக்ஸியாக வந்து, மாணவர்களின் androgen சுரப்பிகளைச் சுண்டியிழுக்கும் வேலைகள் நியாயம் தானா என்று அவர்களுக்குள்ளேயே ப்ரைவெட்டாக ஒரு GD வைத்து முடிவு பண்ணிக் கொள்ளலாம். 6. கல்லூரியில் நடக்கும் டெக்னிக்கல் symposium-களில், ஹாலுக்கு வெளியே ரிஸ்ப்ஷனிலும், ஹாலுக்கு உள்ளே ஆடியன்ஸ்க்கு பிஸ்கட்-காப்பி கொடுப்பதற்கும், பரிசு கொடுக்கும் விழாக்களில் chief guest கையில் பரிசைக் கொண்டு கொடுப்பதற்கும், ஒரு கலருக்காக ஸ்டேஜில் நின்று குசுகுசுத்துக் கொள்வதற்கும் மட்டும் பெண் பிள்ளைகளைப் பயன்படுத்துவதும், அவர்களும் அதைப் பெரும் பேறாகக் கருதி சர்வஜன சேவை செய்வதும், அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலை என்கிற ஞானோதயம் அடைய முயலலாம். symposiu-த்தின் டெக்னிக்கல் சமாசாரமும் உண்டு என்று சற்று எண்ணிப் பார்க்கலாம். 7. சில சமயம், இருப்பது போதாதென
று, மாணவர்களைத் தூங்க வைக்க, IIT, REC, என்கிற வேற்று கிரகங்களிலிருந்து சில பிறவிகளை வரவழைத்து, guest lecture என்கிற கவுரவப் பெயரில் அவர்களும் 120-200 என்று இஷ்டத்திற்கு ஸ்லைடுகளைப் போட்டு, புரியாத விஷயத்தைப் புரிய வைக்கக் கூட யத்தனிக்காமல், அவர்கள் பாட்டுக்கு லெக்சர் கொடுக்கிற பேத்தல் சமாசாரங்களைக் கைவிட முன்வரலாம். 8. டிப்ளமோ அளவிற்குப் பெரிதாக(!) இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு ரேடியோவையோ, ஒரு டிவியையோ திறந்துகாட்டி, இது இது இன்னது என்றாவது காட்டலாம். இஞ்சினீயரிங் படித்ததற்கு ஒரு அர்த்தம் கிடைக்க வழி செய்யலாம். இன்னும் எத்தனையோ யோசனைகள் சொல்லலாம். அப்துல் கலாம் தேச முன்னேற்றத்திற்குச் சொன்ன எட்டு அம்சத் திட்டம் போல, இந்த எட்டு விஷயத்தையும் நிறைவேற்ற முயலலாம். புண்ணியம் கருதியாவது…

Written by Deepak

April 10th, 2005 at 10:16 am

DIYA – இளைஞர்கள் தொடங்கிய சமூக நல இயக்கம்

leave a comment

செப்டம்பர் 2004-இல், மின்னஞ்சல் வழியாக சில நண்பர்கள் நாங்கள் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது, EEE Dept-ஐச் சேர்ந்த நண்பர் சீனிவாஸ் மனதில் ஒரு சிந்தனை உதித்தது. நம் எல்லோருக்கும் சமுதாய மேம்பாடு, நலிந்தோர் நலன், பரோபகாரம் போன்ற விஷயங்களில் நாட்டம் உண்டு. நாம் ஏன் சமூக நல இயக்கம் ஒன்றைத் தொடங்கக் கூடாது என்று நண்பர் எண்ணினார். இக்கருத்தை எங்களிடம் எடுத்து வைத்தார். அனைவரின் இசைவுடனும், ஆதரவுடனும் தொடங்கிய சமூக நல இயக்கம் தான் தியா (Diya). இதற்கு, slogan ஆக, Illuminating lives… என்பது தெரிவு செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை எத்தனையோ வாழ்வுகளில் ஒளியேற்றியிருக்கிறது.

எங்கெல்லாம் orphanageகளுக்கு நிதியுதவி, பொருளுதவி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் அவ்வுதவிகளைப் புரிந்து வருகிறோம். அங்கத்தினர் மற்றும் பிறர் அளிக்கும் நிதியைக் கொண்டு எங்களால் இயன்ற நல உதவிகள் செய்கிறோம். நலிந்தோர் மனைகளுக்குச் சென்று, அவர்களுக்கு விருந்தளித்து, குழந்தைகளுடன் விளையாடி, அவர்களை மகிழ்வித்து, அவர்களின் அன்பில் திணைக்கிறபோது, எங்கள் மனதிற்குள் ஒரு இனம் தெரியாத பூரிப்பு மலர்வதை ஒவ்வொரு தியா அங்கத்தினரும் சொல்வார்.

செப்டம்பரில் தொடங்கிய “தியா”வில் இன்று சுமார் 125 பேர் அங்கத்தினராக உள்ளனர். இது வரைக்கும் ரூ.30,000/- அளவிற்கு சமூக நல விஷயங்கள் செய்துள்ளோம் என்பதைக் கூறும்போது, எங்களுக்குள்ளேயே தியாவின் ஒளி பிரகாசிக்கிறது.

Jeroham ministries, உதவும் உள்ளங்கள், அன்புக் கரங்கள், சுபத்ரா ஹோம் போன்ற பத்திற்கும் மேல்பட்ட ஹோம்களுக்கு நிதி, பொருட்கள் போன்ற உதவிகளைச் செய்திருக்கிறோம். தியா சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு பல நல உதவிகள் புரிந்தோம். ஒரு இரத்த தான முகாமிற்கும் ஏற்பாடு செய்திருந்தோம்.

7 மாதங்களுக்கு முன்னால் ஒரு கனவு போல் இருந்த தியா, இன்று பல சாதனைகளுடன் வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் செய்வதற்கு எத்தனையோ திட்டங்கள் கனவுகளாக இருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் மேலும் பல சமூக நலக் காரியங்களில் ஈடுபட்டு, சமுதாயத்தை அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் re-engineer செய்வதே எங்கள் நோக்கம். தியா பற்றிய விவரங்களுக்கு, எங்கள் இணையத் தளத்தைக் காண்க: http://diya.org.in

Related Posts with Thumbnails

Written by Deepak

March 9th, 2005 at 12:33 am