Amusingly Simple

A blog by Deepak Venkatesan

Archive for the ‘அனுபவம்’ Category

புத்தாண்டில் புதுத்தொடக்கம்

one comment

எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள் தேர்வு செய்தோம். நண்பர்கள் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீராம், விக்ரம் உள்ளிட்ட பலரும் சேர்ந்து, குழிகள் தோண்டி மரங்களை நட்டோம். மரங்களுக்குப் பாதுகாப்பாக எளிய முறையில், பொருட்செலவு இல்லாமல் வேலி அமைக்கும் திட்டத்தை நண்பர்கள் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் கடைகளில் இருந்து பழைய டயர்களை வாங்கிவந்து, அவற்றை உள்வெளியாகத் திருப்பிவிட்டால், பட்டையாக இருக்கும். நடுகிற மரத்தைச் சுற்றி மூன்று கொம்புகள் நட்டு அவற்றில் இந்த டயர்களைக் கட்டிவிடுகிறார்கள். இதனால், ஆடு மாடுகளிலிருந்து இந்த மரங்கள் எளிதில் காப்பாற்றப்படுகின்றன. நமக்கும் பொருட்செலவு இல்லை.எங்கெல்லாம் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரிக்க ஒத்துக்கொள்கிறார்களோ, அங்கெல்லாம் மட்டுமே மரங்களை நட்டோம். முதல் மாதம் அந்தக் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரித்தால், பின்னர், வாரம் இருமுறை மரங்களுக்கு நீர் பாய்ச்ச ஆளமர்த்தும் திட்டமும் உள்ளது. படிப்படியாக வாரந்தோறும் மரங்கள் நட்டு, வேளச்சேரி 100 அடி சாலை முழுவதையும் கவர் செய்வதென முடிவு செய்துள்ளோம்.
இதற்கு முன்னால், தியா சார்பில், ‘நிழல்’ என்ற அமைப்பின் உதவியுடன் வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தியா சார்பில் பல நல்ல சமூக திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். 2007-இல் இன்னும் பல விஷயங்கள் ஈடேறும் என்றும் எதிர்பார்க்கலாம். தியா மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும். http://diya.org.in

பசுமையுடன் தொடங்கிய 2007, பசுமையான விஷயங்களோடு செழிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Written by Deepak

January 1st, 2007 at 8:23 am

இப்போது தான் ஈ அடிக்கிறேன்

7 comments

ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து – ‘E’ தான். ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பது போல், ‘E’ இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி. E – ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, குடலுக்குள் இருக்கிற ‘E’.coli பாக்டீரியா தான் காரணமாக இருக்கிறது. இந்தத் தகவலையெல்லாம் என் கணிப்பொறியில் உள்ளீடு செய்வதற்கு E-கலப்பை என்ற மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறேன். ‘ஈ’ என்ற பெயரில் நயந்தாரா நடித்தப் படம் வந்து சக்கை போடு போடுகிறது. E என்ற பெயரில் கணிப்பொறி மொழி கூட உள்ளது.

கணிதத்தில் ‘e’ என்பது natural logrithms-ஐக் குறிக்கிறது. பள்ளிக்கூடத் தேர்வில் இந்த விஷயத்தைப் பக்கத்தில் இருக்கும் பையனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதினால் ‘ஈ’ அடிச்சான் காப்பி என்கிறார்கள். அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் புகழ் பெற்றதே ‘E’-யின் மதிப்பைச் சொல்லித்தான். இசையின் ஏழு ஸ்வரங்களில் ‘E’ தான் மூன்றாவது ஸ்வரம். ‘E’ என்ற எழுத்து குறிக்கிற electric field இல்லையேல் மின்சாரம் இல்லை, மின்னணுவியல் இல்லை, மின்காந்த அலைகள் இல்லை, டிவி, ரேடியோ, மொபைல், இணையம் – எதுவுமே இல்லை.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? E என்பது நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வதற்குச் சமீபத்தில் தான் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.

பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கவிதை எங்கேயோ படித்திருக்கிறேன் (தினத்தந்தி – குடும்ப மலர் என்று நினைக்கிறேன்). இன்னும் வரிகள் நினைவிலிருக்கிறது. வ்டித்தவர் பெயர் நினைவில்லை.

ஒன்றாய் இருந்த போது ஒட்டத் தெரியாத இதயம்,
ஒதுங்கிச் இருக்கும் போது ஒன்றிடத் தவிக்கிறது.

அது போல், E-யின் அருமை E இல்லாத போது தான் தெரிந்தது. என் அலுவலகக் கணிப்பொறியின் கீபோர்டில், E என்ற எழுத்து மட்டும் ஒரு பதினைந்து நாட்களாக வேலை செய்யவில்லை. அதனால், E அடிக்க முடியாமல் நான் ஈ அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் E பற்றி அறிந்து கொண்டேன்.

கடைசியாக என் கீபோர்டை மாற்றிவிட்டார்கள். அலுவலகத்தில் இப்போது நிம்மதியாக E அடித்துக் கொண்டிருக்கிறேன்.

Written by Deepak

November 12th, 2006 at 12:21 am

சென்னை மழைச் சுற்றுலா

10 comments

சென்னையில் அழகான மழை! மழை என்றாலே சென்னை மிகவும் சுவாரஸ்யமாகி விடுகிறது. தெருவெல்லாம் கண்ணாடிகளாகி விடுகின்றன. கொஞ்சமாக பைக் சறுக்குகிறது. எல்லோரும் நத்தைகள் போல நின்று நின்று கவனமாக சாலைகளில் செல்கிறார்கள். குடைகள் இல்லாதவர்கள் தெருவில் ஓட்டம் பிடிக்கிறார்கள். தொப்பலாக நனைந்தும், வீரமாக வண்டியோட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். கார்களில் விருட்டெனப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள், இப்போது கார்களைச் செலுத்திக்கொண்டு, முன்னால் அதீத ஜாக்கிரதையுடன் செல்கிற சைக்கிள்காரனைப் பின்தொடர்ந்து, மெதுவாக மெதுவாக பவனிவருகிறார்கள். ஆட்டோக்கள் ‘நானே ராஜா’ என்று பாகுபாடில்லாமல் எல்லோர் மீதும் தண்ணீரை வாரியிறைத்து ‘ட்டப்பட்ட ட்டப்பட்ட’ என்று மோட்டார் புகை கக்க முன்னேறிச் செல்கிறார்கள். மஞ்சள், சிகப்பு, நீலம், கறுப்பு என்று கலர்கலராக ‘ஜெர்க்கின்’கள் அணிந்தவர்கள் பைக்குகளில் ஹீரோக்களாக பவனி வருகிறார்கள்.

இந்த சுவாரஸ்யமான (interesting) காட்சிகளெல்லாம் மழை வந்தால்தானே பார்க்க முடிகிறது. கொஞ்சம் கவனத்துடன் வண்டியைச் செலுத்த வேண்டும். எகிப்து மம்மிகள் போல் முற்றும் மூடிய ரெயின்கோட் அணிய வேண்டும். நிறைய பொறுமை வேண்டும். புஷ்டியான தேகம் வேண்டும். அவ்வளவு தான். இப்போது நீங்கள் சென்னை மழைச் சுற்றுலாவிற்கு ரெடி. நீங்கள் என்னைப்போல் இல்லாமல் எலும்பும் தோலுமாக இருந்தால், கிளம்பாதீர்கள். சென்னை சாலைகளின் மேடு பள்ளங்களில் உருண்டு பிரண்டு எழுந்து வருகிற பயிற்சி இது. திரும்பும் வரையில் திடகாத்திரமாகத் தாக்குப்பிடிப்பது அவசியம்.

சென்னை மழையில் வண்டி (two-wheeler) ஓட்டுவதற்குக் கொஞ்சம் ஆபத்தான சாலைகளில் அண்ணாசாலை முக்கியமானது. வழவழவென்று தார் போட்டிருப்பதால், வண்டி அருமையாக வழுக்கும். எப்போதும் மழை கொட்டிக்கொண்டே இருப்பதால், எல்லோரும் கண்களை மூடியபடி தான் வருவார்கள். ஆட்டோக்களுக்கு ‘சடன் பிரேக்’ அவார்டு கொடுக்கலாம். உங்கள் வண்டியின் பிரேக்குகளைத் தீட்டி வைத்துக் கொள்வது அவசியம். முன்னால் செல்பவர்களுக்கு முன்னால் செல்பவர்களுக்கு முன்னால் இருக்கிற வண்டியில் சிகப்பு விளக்கு தெரிந்தவுடன் பிரேக்கைப் பிடிக்க வேண்டும். இது முக்கியமானது. உங்களின் reflex reaction நேரத்தைப் பரிசோதிக்கும் பயிற்சி இது. சென்னையில் சாதாரண காலங்களிலும் இது அவசியம் என்றாலும், மழைக் காலங்களில் இது வீர விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனாலும் ஆபத்துகளைத் தாண்டி நம் கவனத்தைக் கவருகிறவர்கள், சின்னச் சின்ன பள்ளிக் குழந்தைகள். அவர்களுக்காகவே சின்னஞ்சிறிய வடிவத்தில் செய்யப்பட்ட ‘மிக்கி மவுஸ்’ ரெயின்கோட்டுகளை அணிந்து, வண்டிகளின் பின்னால், தன் தாய் அல்லது தந்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வருகிற குழந்தைகள் – கவிதைகள். இன்னும் தன் அம்மாவின் கைவிரல்களைப் பற்றிக்கொண்டு, தலையில் குடை போன்ற தொப்பிகளை அணிந்து கொண்டு, பள்ளிச் சீருடையில் பவனி வரும் குட்டிகள் மேலும் அழகு. அவர்கள் ரோட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ‘ச்சபக் ச்சபக்’ என்று குதித்து பின்னால் வருகிற அம்மாவை டென்ஷன் ஆக்குவது அழகோ அழகு!

சென்னை மழையில் தான் எத்தனை அழகு!

எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிற A/c-க்குக் கொஞ்சம் விடுமுறை. சென்னை வீடுகளில் எங்கோ முடங்கிக் கிடந்த கம்பளிகளுக்குக் கொஞ்சம் கவனிப்பு, போட்டி. எப்போதும் சுமை சுமையாகப் புத்தகங்களைத் தூக்குகிறப் பிஞ்சுகளுக்குக் கொஞ்சம் லீவ். வீட்டில் அமைதியாக மெகா சீரியல் பார்த்து அழுகிற அம்மாக்க
ுக்குக் அழுவதற்கு வேறு கொஞ்சம் சுவாரஸ்யமான காரணங்கள். மழைக்கு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றவர்களின் செல்பேசிகளுக்குக் கொஞ்சம் ஓவர்டைம். நீர் தேங்கி நிற்கும் சாலைகளால், மாநகராட்சிக்குக் கொஞ்சம் கெடுபிடி. கூரை வீடுகளில் வாழ்கிறவர்களுக்குக் கொஞ்சம் ஒழுகல். மருத்துவர்களிடத்தில் கொஞ்சம் அதிகமாகவே கூட்டம். மருந்துக் கடைகளுக்குக் கொஞ்சம் கொண்டாட்டம்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய சுவாரஸ்யங்கள். சென்னையில் அழகான மழை!

Related Posts with Thumbnails

Written by Deepak

October 28th, 2006 at 8:14 pm