சென்னை 30-ஆவது புத்தகக் காட்சி

January 15th, 2007       5 comments

ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக இருந்த parking area-வில் வண்டியை நிறுத்தினோம்.

குமுதம், விகடன், எக்ஸ்பிரஸ் என்று எல்லோரும் சேர்ந்து வரவேற்றார்கள். நுழைவுச்சீட்டு வாங்க நேராகச் சென்ற எங்களுக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி. நடிகர் சூர்யா எழுதிய “இப்படிக்கு சூர்யா” என்ற நூல் வெளியீடு விழா நடந்து கொண்டிருந்தது. அலையன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடு. பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருந்தார். எதேச்சையாக வந்த கூட்டத்தைத் தவிர பெரிய கூட்டம் இல்லை. அதனால், சூர்யாவை அருகில் சென்று கண்குளிர (ஹிஹி… என்ன பண்றது…?) பார்த்து டிஜிக்கேமில் படங்கள் எடுத்துக் கொண்டோம். சூர்யா எப்படியெல்லாம் பெற்றோருக்கு அடங்கிய சமர்த்துப் பிள்ளையாக இருக்கிறார் என்பது பற்றி பாப்பையா பேசிக்கொண்டிருந்தார். அங்கேயே புத்தகம் வாங்குகிறவர்களுக்கு சூர்யா கையெழுத்திட்டுத் தருவார் என்றதும் பல இளைஞர் இளைஞிகள் மேடையை மொய்த்தனர். நாங்கள் ticket counter-ஐ நோக்கி நடந்தோம்.

ஐந்து ரூபாய் நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் முதலில் கவனித்த விஷயம், பிளைவுட் தரை அமைத்திருந்தார்கள். தூசு, மேடு-பள்ளம் என்ற கவலையெல்லாம் இல்லை. இன்னும் அந்த மைதானம் முழுவதற்குமாகப் பெரிய பந்தல் அமைத்திருந்தார்கள். ஆங்காங்கே மின்விசிறிகள் அமைத்திருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாகப் போவது போல் இல்லாமல், வரிசையாக ஸ்டால்களை அமைத்திருந்தார்கள். ஒரு வரிசையை முடித்துவிட்டு, நேராக, அடுத்த வரிசைக்குச் செல்லலாம். அதுமட்டுமின்றி, நல்ல அகலமான பாதை. சென்ற ஆண்டு நடந்தது போல தள்ளுமுள்ளு அனுபவமெல்லாம் இம்முறை கிடையாது. நிறைய கூட்டம் இருந்தபோதும், free-யாக நடக்க முடிந்தது.

புத்தகக் காட்சியில் பெருவாரியாகக் கண்ணுக்குத் தெரிந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கானவை தான். இளமையிலேயே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி என்றால், பாராட்டலாம். இரண்டாமிடம் ஆன்மீகப் புத்தகங்களுக்கு. புதிது புதிதாகப் பல ஆன்மீகவாதிகள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டு ஆன்மீகம் அதிகமாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். (என் கற்பனையாகவும் இருக்கலாம்). அதன் பின்னால், எப்போதும் போல், பணம் பண்ணுவது எப்படி, வேலை தேடுவது எப்படி போன்றவைகள். எனக்கு மிகவும் பிடித்தமானவை, புத்தக விநியோகஸ்தர்களின் (distributors) ஸ்டால்கள் தான். அவர்களிடம் பல ஊர்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் பலரும் எழுதும் quality writing கிடைக்கிறது. அது தவிர, பல நம் ஊர் பதிப்பகங்கள் வாயிலாக, புதிய படப்பாளாகளை அடையாளம் காண முடிந்தது. பொதுவாக புத்தகக் கடைகளில் கிடைப்பதை விட இங்கு 10% விலை குறைவு என்பது ஒரு பிள஦lt;br /> ?் பாயிண்ட். புஸ்தக் மஹால், திருமகள் நிலையம், கிழக்கு பதிப்பகம், உயிர்மை பதிப்பகம் என்று பல ஸ்டாலகளில் பலப்பல புத்தகங்கள் வாங்கித் திணித்துக் கொண்டேன். ஒரு வருடம் முழுவதற்கும் வேண்டுமல்லவா? உயிர்மை பதிப்பகத்தில் மனுஷ்யபுத்ரன் அவர்களைப் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

பல இடங்களில் மின்விசிறிகள் வைத்திருந்தாலும், காற்றோட்டமாக இல்லாமல் கொஞ்சம் அடைப்பாக இருந்தது ஒரு குறை. அதுவுமில்லாமல், வரிசைகள் நீளமாக இருந்ததும், ஒரு வரிசை முழுவதும் கடந்து தான் அடுத்த வரிசைக்குப் போகவேண்டியிருந்ததும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஸ்டால்களுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் தடுப்புகள் போட்டிருந்தார்கள். பல தடுப்புகள் தள்ளப்பட்டு, மக்கள் அடுத்த வரிசைக்குச் செல்ல குறுக்கு வழிகள் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், காட்சிக்கு உள்ளே எதுவும் உண்பதற்குக் கிடைக்கவிலை. இது ஒரு விதத்தில் நன்றாக இருந்தாலும், கிட்டத்தட்ட 400 ஸ்டால்கள் இருப்பதால், பாதி முடிப்பதற்குள் சோர்வாகிவிடுகிறது. எதுவும் உள்ளே போகாமல் முழுவதும் முடிப்பது சிரமம். ஆனால், கண்காட்சிக்கு விளியில், பெரிய அரங்கம் அமைத்து “The Rice Bowl” என்ற பெயரில் food court அமைத்திருக்கிறார்கள். மிகவும் வரவேற்கத்தக்கது. (ஹிஹி…).

Prodigy ஸ்டாலில் புதிய முயற்சியாக குழந்தைகளுக்காக, ஓவியம் தீட்டும் போட்டிகள் நடத்துகிறார்கள். பல குழந்தைகளை வரைய விட்டு அம்மாக்கள் அவர்களை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியே மற்றுமொரு சிற்றரங்கத்தில் அறிவியல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குழந்தைகளுக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கும் பயனளிக்கும். இன்னும் ஆவணப் படங்கள் போன்றவற்றுக்காக சிற்றரங்கம் அமைத்திருந்தார்கள். நேரமின்மையால் இவற்றைக் கவர் பண்ண முடியவில்லை. இம்முறை காட்சியில் ஸ்டால்கல் எல்லாம் Chennai Trade Centre-இல் இருப்பது போல் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் அமைத்திருந்தது குறிப்பிடவேண்டிய விஷயம். எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்த போது, கங்கை அமரன் அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சில நல்ல பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

புத்தகக் காட்சியில் எல்லா தரப்பினருக்கும் ஏதேனும் கிடைக்கிறது. என் போன்றவர்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. BAPASI நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்குத் தமிழக முதல்வர் permanent-ஆக நிலம் ஒதுக்க இசைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இன்னும் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் எழுத்தாளர்களுக்காக வழங்கியிருக்கிறபடியால் கலைஞரைப் பாராட்டலாம். சென்னையில் புத்தகக் காட்சி பற்றி இன்னும் அதிகமாக விளம்பரமும் விழிப்புணர்வும் ஏற்படுத்துவது அவசியம். தமிழக-தென்னக-இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளோடு, அதிகமான அளவில் உலக எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவற்றின் தமிழாக்கப் பதிப்புகளையும் கொண்டு வரலாம். இன்னும், தமிழ் புத்தகங்களின் அச்சுத் தரத்தை மேம்படுத்தலாம். Travelogues, Armchair Reading, Satires போன்ற விஷயங்களைத் தமிழில் அதிகமாகவும் அழகாகவும் வெளியிட முயலலாம். இது போன்ற படைப்புகளுக்கு பதிப்பகத்தாரும், அவ்வண்ணமே அரசாங்கமும் ஊக்கமளித்தால், தமிழின்-தமிழரின் ப்டைப்புகளில் ஒரு variety-யைக் கொண்டுவர முடியும். தமிழ் கற்றவர்களின் அறிவுத் தேடல்களுக்கு நல்ல தீனி போட முடியும்.

கற்றது கைம்மண்ணளவு – கல்லாதது உலகளவு! அனைவருக்கும் இனிய பொবt;br /> ??்கல் நல்வாழ்த்துகள்!

மார்கழியில் மாக்கோலங்கள்

January 11th, 2007       2 comments

என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில் படத்தில் இருப்பதி simple தேர்க் கோலம். நிஜமான தேர்க் கோலத்தின் படம் கிடைக்கவில்லை.பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா – பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் கொண்ட கம்பிக் கோலங்கள் போடுவது வரை பலவும் பழகியிருக்கிறேன். பக்கத்து வீட்டார் கொண்டு வந்து கொடுத்த கோலப் புத்தகத்தில் இருந்த கோஅங்களையெல்லாம் காப்பி அடித்து நோட்டில் வரைந்து வைக்க ஆரம்பித்து, பின்னால், அதை அடிப்படையாகக் கொண்டு மண் தரையில் கோலமாவில் மாக்கோலம் போடும் அளவுக்குக் கைதேர்ந்தவனானேன் என்பதில் எனக்கு நிறைய பெருமிதம் உண்டு.

;

அப்போதெல்லாம், கோலம் என்றாலே எல்லோரும் சங்கு கோலம், மயில் கோலம், கத்திரிக்காய் கோலம், ரோஜா கோலம் என்று சில ஸ்டாண்டர்ட் கோல வகைகள் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் பல யுகங்களாகப் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கண்ணிமைக்கும் நேரத்தில் கத்திரிக்காய் கோலம் போட்டு விடுவார்கள். அவ்வளவு பிராக்டிஸ். இன்னும், பஃபூன் கோலம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கோலம், என்றெல்லாம் உண்டு. பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக, விகடன், குமுதம் போன்ற அறிவுக் களஞ்சியங்கள் வாயிலாக மக்கள் புதுப்புது கோலங்களைக் கற்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு, கோலத்திற்கென்றே பட்டயப் படிப்பு இருக்கிறதென்று யாராவது சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்னதான் விதம் விதமாகக் கலர் கோலங்கள் போட்டாலும், எனக்கு எப்போதும் கம்பிக் கோலங்கள் மீது நிறைய பாசம் உண்டு. கம்பி கோலங்கள் தான் ஒரு கோல வல்லுனரின் நிபுணத்துவத்தை (expertise) பறைசாற்றுவது போல இருக்கும். என்னிடம் இருந்த கலெக்ஷனிலேயே மிகவும் கடினமான கம்பிக் கோலங்களைக் கண்டுபிடித்து, அவற்றையெல்லாம் பழகி, இரவு நேரங்களில் போடுவேன். என் வீட்டில் இரவில் தான் கோலம் போடுவர்கள். மார்கழி பனியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டுக் கோலம் போடுவதெல்லாம் கிடையாது. எங்கள் தெரு முழுவதும் இரவில் கோலம் போடுவார்கள். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு கோலங்கள் போடுவார்கள். பின்னர், தெரு பெரியவர்கள் ஒவ்வொரு கோலமாகப் பார்த்து மார்க் போடுவதும் நடக்கும். நன்கைந்து பேர் சுற்றி நின்றுகொண்டு கோலம் போடுவதைப் பார்த்தார்கள் என்றால், நாம் பாஸ். நிறைய முறை என் கோலம் பாஸ் ஆகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் கிளாஸில் எல்லாம் கூட…

இப்போதெல்லாம் கோலங்கள் குறைந்து விட்டன. இன்னும் எங்கள் தெருவில் கோலம் போடுகிறார்கள். ஆனால் முன்பிருந்த போட்டி, வேகம் எல்லாம் இல்லை. நானும் கல்லூரி, வேலை என்று விலகி விட்டதால் என் அம்மாவும் பாட்டியும் தான் இன்றைக்கும் கோலம் போடுகிறார்கள். பல நண்பர்கள் வீடுகளில் எல்லாம் கோலம் போடுமளவிற்கு வீட்டின் வாசலில் இடம் இல்லை. குறிப்பாக, இப்போது அனைவரும் பிளாட்டுகளில் வசிப்பதால், ஸ்டிக்கர் கோலம் வாங்கி வந்து, கதவின் வெளியில் ஒட்டி விடுகிறார்கள். ஒரு மார்கழியிலிருந்து அடுத்த மார்கழி வரும் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் தான். கத்திரிக்காய் கோலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று நினைக்கிறேன். சங்கு கோலம் பட்டும் இன்னும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. என்ன இருந்தாலும், இன்றைக்கும் தேர் வடிவில் கம்பிக் கோலம் யாராவது போட்டிருந்தால், இரண்டு நிமிடம் நின்று பார்த்து ரசித்துவிட்டுச் செல்கிறேன். நாளைக்கு இருக்குமோ இருக்காதோ…!

புத்தாண்டில் புதுத்தொடக்கம்

January 1st, 2007       1 comments

எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள் தேர்வு செய்தோம். நண்பர்கள் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீராம், விக்ரம் உள்ளிட்ட பலரும் சேர்ந்து, குழிகள் தோண்டி மரங்களை நட்டோம். மரங்களுக்குப் பாதுகாப்பாக எளிய முறையில், பொருட்செலவு இல்லாமல் வேலி அமைக்கும் திட்டத்தை நண்பர்கள் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் கடைகளில் இருந்து பழைய டயர்களை வாங்கிவந்து, அவற்றை உள்வெளியாகத் திருப்பிவிட்டால், பட்டையாக இருக்கும். நடுகிற மரத்தைச் சுற்றி மூன்று கொம்புகள் நட்டு அவற்றில் இந்த டயர்களைக் கட்டிவிடுகிறார்கள். இதனால், ஆடு மாடுகளிலிருந்து இந்த மரங்கள் எளிதில் காப்பாற்றப்படுகின்றன. நமக்கும் பொருட்செலவு இல்லை.எங்கெல்லாம் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரிக்க ஒத்துக்கொள்கிறார்களோ, அங்கெல்லாம் மட்டுமே மரங்களை நட்டோம். முதல் மாதம் அந்தக் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரித்தால், பின்னர், வாரம் இருமுறை மரங்களுக்கு நீர் பாய்ச்ச ஆளமர்த்தும் திட்டமும் உள்ளது. படிப்படியாக வாரந்தோறும் மரங்கள் நட்டு, வேளச்சேரி 100 அடி சாலை முழுவதையும் கவர் செய்வதென முடிவு செய்துள்ளோம்.
இதற்கு முன்னால், தியா சார்பில், ‘நிழல்’ என்ற அமைப்பின் உதவியுடன் வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தியா சார்பில் பல நல்ல சமூக திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். 2007-இல் இன்னும் பல விஷயங்கள் ஈடேறும் என்றும் எதிர்பார்க்கலாம். தியா மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும். http://diya.org.in

பசுமையுடன் தொடங்கிய 2007, பசுமையான விஷயங்களோடு செழிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  • The Author

    DEEPAK VENKATESAN

    A Bangalore-based blogger, amateur photographer, engineer, traveler, bird-watcher, cartoonist, designer, stage-performer, and a good cook.
    Know more!

  • Indiblogger Points (Higher the better)

  • I said this on Twitter

  • What the readers feel?

    • MM: oolaalaa…wow…sound s like a nice adventure…
    • varundbest: I always visit your blog and retrieve everything you post here but I never commented but today when I saw...
    • Hemanth: good article…. I too did the yes!+ course…….Definitel y it is a good course and art of...
    • MM: Haha hilarious….good read…and good luck with the search…
    • Suchindra: I have bought a e-stamp, but the deal could not go through. Am left with a e-stamp with names of the...
  • My Random Photos

    More
  • Topics

  • Attic

  • Still not in the Attic