எல்லோருக்கும் நேராக வைத்த மையை எனக்கு மட்டும் கோணலாக வைத்து விட்டார்களே என்று தேர்தல் மைய அதிகாரி மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. அதிலும் என் என் நடுவிரலில் வேறு சிறு சிந்தல். அப்புறம், என் அலுவலக நண்பரின் விரலைப் பார்த்த பின்பு தான் எனக்கு ஆறுதல். அவர் கை முழுவதும் ஒரு மினி கோலமே போட்டுவிட்டிருந்தார்கள் தேர்தல் மைய அதிகாரிகள். முதல் முதலாக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சி – ஏதோ இந்தியாவிற்கே ஜனாதிபதி ஆகிவிட்டது போல. அலுவலகத்தில் நண்பர்கள் பலரும் முதல் முறையாக வாக்களிக்கிறவர்கள் என்பதால், எல்லாருக்குமே உற்சாகம். மே 8-ஆம் தேதி முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது. விரலை உயர்த்தி அவரவர் கையில் வாங்கிய மையைக் காட்டிப் பெருமைபட்டார்கள். கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் டென்ஷன் இருக்கிறதோ இல்லையோ – எங்களுக்கு இருக்கிறது – நாளை ஆட்சி அமைக்கப் போவது யார் என்று. இந்த முறை முதல் முறையாகப் பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கை ஓங்கி இருந்தது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் தொகுதி பக்கமெல்லாம் மெகா சைஸில் வரையப்பட்டிருக்கும் தலவர்களின் படங்களை இம்முறை காண முடியவில்லை. சுவர்களில் டப்ல் கலரில் நான்கடி உயர எழுத்துகளில் வரையப் பட்டிருக்கும் ‘கலைஞர்’, ‘அம்மா’, ‘அய்யா’ போன்ற பெயர்களெல்லம் இந்த முறை எங்கேயும் இல்லை. கொடிகள், தோரணங்கள், பேனர்கள், விளம்பரப் பலகைகள் என்று எதுவுமே அதிகம் இல்லாமல் அமைதியான தேர்தல் நடந்ததற்குத் தேர்தல் ஆணையத்தைப் பாராட்ட வேண்டும். அதே போல், முதல் முறையாக தேர்தலில் ‘49-ஓ’ பற்றி நிறைய விளம்பரம் செய்யப்பட்டது. ஞாநி அவர்களின் படம் போட்ட PDF கோப்பு மின்னஞ்சலில் சர்குலேட் செய்யப்பட்டது. 49-ஓ பற்றி நிறைய விளக்கி, அதனைப் பயன்படுத்த வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், அப்படி யாரும் 49-ஓ பயன்படுத்தியதாக சேதி இல்லை. 49-ஓ போட வேண்டும் என்று வாக்குச்சாவடிக்குப் போனவர்களைக் கூட அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கேள்வி. அப்படி ஒரு பிரிவு இருப்பதாகத் தெரியவில்லை என்று கூட பலர் சொன்னதாக ஒரு மடல் கிடைத்தது. இந்த 49-ஓ எந்த அளவிற்குச் சாத்தியமானது? இல்லை உண்மையில் அப்படி ஒரு பிரிவு இருக்கிறதா? இருக்கிறது என்றால் தேர்தல் ஆணையம் பெயரளவுக்காவது அதைப் பயன்படுத்தும் வசதி செய்யாதிருப்பது ஏன்? – இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியுள்ளது. தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வரை ‘லோக் பரித்ராணா’ என்று இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி பற்றி நிறைய பேச்சு அடிபட்டது. அவர்கள் மூதல் முறையாக இத்தேர்தலில் போடியிடுகிறார்கள். நிறைய நண்பர்கள் அக்கட்சியில் overnight அதிரடியாக சேர்ந்தார்கள். வீட்டில் ஒருபோதும் துடைப்பத்தைத் தொட்டறியாத சில நண்பர்கள் அக்கட்சியின் சார்பில் தெருவைக் கூட்டி சுத்தம் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.
ஆனால் இக்கட்சி அத்துணைப் பெரிய நம்பிக்கை தருவதாக இல்லை. அவர்களின் நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை. சில மாணவர்கள் பிட் நோட்டீஸ் அடித்து தெருக்களில் சுற்றினார்கள். இதுவரை வாக்களித்துப் பழக்கமில்லாத அறிவுஜீவிகள் சிலர் ஆதரவு தெரிவித்தார்கள். மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள் என்று ஒரு மிகக் குறுகிய வட்டத்துக்குள் அக்கட்சி அகப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். கட்சியில் சேருவதற்கு படித்தவர்களாக இருக்க வேண்டும் என்றார்கள், யாருக்குமே தெரியாமல் எங்கோ கூட்டம் நடத்தியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்களின் கட்சியின் பெயர் கூடப் பலருக்குத் தெரியவில்லை. (ஒரு வேளை ஹிந்தி பெயர் தமிழகத்தில் எடுபடவில்லையோ?). மொத்தத்
ில், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் காட்டிய அவசரத்தைப் பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிற வேலைகளில் காட்டலாம். கொஞ்சம் மக்கள் மத்தியில் இறங்கிப் பணியாற்றினால் அவர்களின் நோக்கம் ஈடேற வாய்ப்புள்ளது. எப்படியோ இம்முறை தேர்தல் முடிந்து விட்டது. நாளை வாக்கு எண்ணிக்கை. சூரியன் பிரகாசமாக இருப்பது போல் தோன்றுகிறது. அள்ளி அள்ளி வீசப்பட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகள், இலவசங்கள் – இவற்றில் இருந்து இந்நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொண்டே நானும் நாளைய முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.
Archive for May, 2006
முதல் முறையாகப் பல விஷயங்கள்
முதல் மசாலா
அது ஏனோ தெரியவில்லை… நான் சாலையில் மோட்டார் பைக்கில் போகிற போது, நிச்சயமாக இரண்டு ஆட்டோக்கள் எனக்கு வழிவிடாமல் எனக்கு முன்னால் போவது வழக்கமாகிவிட்டது. இல்லை, ஹைதர் காலத்து ஸ்கூட்டர் ஒன்றை ஓட்டிக் கொண்டு செல்கிற நபர், தன்னைத் தாண்டிச் செல்லும் வாகனங்களையெல்லம் பொருட்ப்டுத்தாமல், மிகுந்த சிரத்தையோடு ஜாக்கிரதையாகத் தன் வாகனத்தை மெல்ல மெல்ல நகர்த்துவார். அதுவும் இல்லை என்றால், ஜுராஸிக் பார்க்கில் ஆடி அசைந்து சர்வகாலமும் தனக்கே உரியதாக எண்ணி நடைபோடும் வெஜிட்டேரியன் டைனோசர்கள் போல மாநகரப் பேருந்துகள் – அதை எப்படியாவது சைடில் முந்திச் செல்லலாம் என்றால், முன்னாலிருந்து முறைக்கும் ஜனம். இதனை எல்லாம் பொறுத்துப் போகத்தான் வேண்டி இருக்கிறது. அந்த இடத்தில் எதுவுமே செய்ய முடிவதில்லை. அவர்களைத் முறைத்துக் கொள்ளவாவது ஒரு இடம் வேண்டுமல்லவா? நேரில் அட்ஜஸ்ட் பண்ணினாலும், பின்னால் பினாத்தவாவது ஒரு கருவி வேண்டுமல்லவா? அதனால் மிகுந்த ஆர்வத்தோடு என் வலைப்பதிவிற்குத் மறுதிறப்பு விழா நடத்திவிட்டேன்.
இன்னும், அலுவலகத்தில் நிறுத்தி வைக்கிற என் பைக்கில் அசிங்கம் செய்துவிட்டுப் போகிற காக்கை, காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய குற்றத்துக்காக இரண்டரை நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு உட்காரும்படி படத்தை எடுக்கிற டைரக்டர், என் காலுக்குப் பொருந்துகிற 12 சைஸ் செருப்பைத் தயாரிக்காமல் ஏமாற்றுகிற காலணி நிறுவனங்கள், கலர் படமே இல்லாமல் வெறும் எழுத்துகளில் செய்தி சொல்லும் ‘எகனாமிக் டைம்ஸ்’, கலர் கலராகப் படங்களையும், படங்களில் உள்ள நபர்களைப் பற்றிய கில்மா செய்திகளையும் மட்டுமே போட்டு, அதையும் ஒரு ரூபாய் விலைக்குக் கொடுத்து, என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களை வாங்க வைக்கிற ‘டெக்கன் குரோனிக்கல்’, சிக்னலில் பச்சை விழுந்தவுடன், தூக்கம் தெளிந்து நான் எழிவதற்குள், பளீரெனப் பரிபோல் பறந்து சென்று எனக்கு ‘பெப்பே’ காட்டும் ‘பஜாஜ் பல்ஸார்’, பைக்கில் செல்லும் போது சாலையை கவனிக்க விடாமல் தன்னைக் கவனிக்கச் செய்யும்ப்டி உலா வருகிற ஃபிகர்கள், காந்தி நோட்டு வாங்கிக் கொண்டு உப்புச் சப்பில்லாத எதை எதையோ சமைத்தோ சமைக்கமலோ தருகிற இத்தாலியன் ரெஸ்டரண்ட், இன்னும் இன்னும் இன்னும் அது இது என்று எல்லாமே தப்பப் போவதில்லை என்னிடமிருந்து…
பல நாட்களாக வேலைப் பளுவாலும், சூழ்நிலை மாற்றங்களாலும், வலையில் தொடர்ந்து எழுத முடியாமல் போனது. அதனால், இந்த முறை தொடங்கும் போதே, நமக்கு விருப்பமான ஒரு தலைப்பாக இருந்தால், என்ன வேலையாக இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு எழுதுவதற்கு நல்ல ‘இன்ஸ்பிரேஷனா’க இருக்குமே என்று எண்ணினேன். அதனால் தான் என் வலைப் பதிவிற்கு, ‘ஆனியன் ரவா மசாலா’ என்று பெயரிட்டேன். ரவா தோசை என்றாலே நாவில் நீர் ஊறும் சுவை. அதிலும் ஆனியன் ரவா என்றால் கேட்கவே வேண்டாம். இன்னும் மசாலாவும் சேர்ந்து கொண்டால், அதன் சுவையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதே போல என் இடுகைகளையும் சுவையாகப் பரிமாற முயல்கிறேன். நீங்கள் என் தளத்திற்கு வந்து என் இடுகையை இது வரை படித்ததற்கு மிக்க நன்றி. இன்னும் எழுதுகிறேன்… பின்னூட்டமிட்டு (Comments) விமர்சியுங்கள்.




