அண்மைக் காலங்களில் திரைப்படங்களில் மட்டுமே கலக்கி வந்த ஹீரோயின்கள் பலர், இம்முறை தேர்தலில் கட்சிகளின் அமோக ஆதரவால், தமிழகமெங்கும் அரசியல் மேடைகளிலும் கலக்கியது செய்தி. ஆனால், இங்கே நான் குறிப்பிடுவது சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகைகளைப் பற்றியல்ல… நிஜமாகவே சுழற்றியடிக்கும் சூறாவளிகளைப் பற்றி. முதலில் அமெரிக்காவில் 'காத்ரினா' என்ற சூறாவளி தாக்கியது. அதன் பிறகு 'ரீட்டா'. அதே மூச்சோடு நம்மூரிலும் 'மாலா', 'ஃபனூஸ்' என்று தன் பங்கிற்கு பெண் புயல்கள் சக்கைப் போடு போட்டன. இப்போது சீனாவில் பல பேரைக் கதிகலங்கச் செய்திருக்கும் 'ச்சான்ச்சூ' என்ற சூறாவளி ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. ஒரு வேளை சீன தேசத்து சிம்ரனாக இருக்கலாம்.
'அமெரிக்காவில் தான் அப்படிச் சூறாவளிகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் என்றால் நம்மூரிலும் மாலா – ஷீலா என்று பெயர் வைக்க வேண்டுமா?' என்று நண்பர் கணேஷ் மாதிரி பலருக்கும் தோன்றியிருக்கும். இதனால், எனக்கு மூன்றாவது வீட்டில் வசிக்கிற மாலாவைப் பார்த்து யாரும் "சூறாவளி… சூறாவளி… சூறாவளி… நீதான்டி!" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பாடிவிட மாட்டார்களா? என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் இந்தச் சூறாவளிகளுக்குப் பின்னால் ஒரு ஃபிளாஷ்பேக்கே இருப்பது தெரியவந்தது. பசிஃபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் போன்றவை பரப்பரவில் மிகப்பெரியவை என்பதால், ஒரே சமயத்தில் பல புயல் சின்னங்கள் அவற்றில் தோன்றக் கூடும். இவற்றில் ஒன்று வடக்கு நோக்கியும், ஒன்று மேற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் நகர்கிறது என்றால், சன் டீவியில் வானிலைச் செய்திகள் வாசிப்பதற்காகத் தோன்றும் பெண் எந்தப் புயலைப் எத்திசையில் நகர்கிறது என்று குழம்பிப் போகக் கூடும். கேட்கிற நாமும் எந்தப் புயலைப் பற்றிச் சொல்கிறார் என்று புரியாமல் விழிக்கலாம். இப்படிப்பட்ட அசௌகரியங்களைத் தீர்க்கவே புயல்களுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். இன்னும், இப்படிப் பெயர் வைப்பதால் வானிலை ஆய்வு மையங்களில் வெவேறு புயல்களைப் பற்றி communicate செய்வது எளிதாகிவிடுகிறது. முதல் முதலாக போன நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆ̥ஸ்திரேலியாவில் வானிலை ஆய்வாளர் ஒருவர் தான் இப்படிப் பெயர் வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த ஊரில் அவருக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூறாவளிகளுக்கு வைத்திருக்கிறார். நம்மூர் போல அங்கே தலைவர்களைப் 'புரட்சிப் புயல்' என்று அழைக்காமல், புயலைத் 'தலைவா' என்று அழைக்கிறார்கள் போல… இதனால், "மன்னார்குடி மாடசாமி மேற்கு நோக்கி நகர்கிறார்", "லல்லு பிரசாத்தால் பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது", "செங்கல்பட்டு சிவாவின் தாக்கம் சென்னையில் குறைந்துவிட்டது" – என்பது போன்ற அறிவிப்புகள் செய்து, தம் மனதை அவர் திருப்திபடுத்திக் கொண்டிருக்கலாம். இரண்டாம் உலகப் போரின் போது பணியற்றிய வானிலை ஆய்வாளர்கள், அட்டகாசம் செய்யும் சூறாவளிகளுக்குத் தன் மனைவி அல்லது கேர்ள் ஃபிரண்டின் பெயரை வைத்து மகிழ்ந்தார்கள். இதன் பின்னால், அமெரிக்க அரசாங்கம் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்காக ஒரு லிஸ்டைத் தயாரித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புயலாக உருவாகும்போது, இந்த லிஸ்டில் உள்ள ஒவ்வொரு பெயராக வைகிறார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் இந்த லிஸ்ட் ரீசெட் செய்து, முதலிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. உலகின் ப
்வேறு இடங்களில் தோன்றும் புயல்களுக்கு அங்கே அருகிலிருக்கும் நாடுகள் புயலின் பெயரை வழங்கி உதவி புரிகின்றன. இந்த மாதிரி உருவானது தான் 'மாலா', 'ஃபனூஸ்' என்ற புயல்கள். இந்த வரிசையில் ப்ரியா, நிலோஃபர், நிஷா என்று இன்னும் பல பெயர்கள் சூட்டப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. அமெரிக்காவிலும் ஜூலியா, பலோமா, மெலிஸா போன்ற புயல்கள் உண்டு. பெண் புயல்கள் மட்டும் தானா என்கிறீர்களா? இல்லை. ஆகாஷ், சாகர், தாஸ் என்று பல ஆண் புயல்களும் வரக் காத்திருக்கின்றன. சுழற்றியடித்து சேதம் விளைவிப்பதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. சுழற்ச்சி முறையில் நம்மூருக்கு மாலா, ப்ரியா போன்ற புயல்கள் மீண்டும் மீண்டும் வரும் என்பதால் அவற்றின் ரசிகர்கள் மனம் தளரத் தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட புயலால் ஒரு நாடு மிகுந்த சேதங்களுக்கு ஆளாகிறது என்றால், அப்புயலுக்கு 'ரிட்டயர்மென்ட்' கொடுத்து விடலாம். அதன் பின்னால் அப்புயல் திரும்ப வராது. வேறு 'இளம்புயலை'த் தேடிக்கொள்ள வேண்டியதுதான். எதிர்காலத்தில் நம் பெயர்களில் எல்லாம் கூடச் சூறாவளிகள் வரலாம். எல்லோரும் சேர்ந்து கலக்கலாம். இப்புயல்களுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகலாம். கோயில்கள் கூடத் தோன்றலாம். 'சுழற்றியடித்த சொப்னா திருக்கோயில்', 'அள்ளித் தெறித்த அல்ஃபோன்ஸா ஆலயம்' என்றெல்லாம் பெயர்கள் கேள்விப்படலாம். ப்ரியாவும் நிஷாவும் நிலோஃபரும் தேர்தல் காலங்களில் மேடைகளில் கலக்கலாம். மந்திரி கூட ஆகலாம். இன்னும் என்னென்னவோ… அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! எப்படியோ… மூன்றாவது வீட்டு 'மாலா' ரிட்டயர் ஆகாமல் அடிக்கடி வந்துகொண்டிருந்தால் மகிழ்ச்சிதான்! நன்றி: நேஷனல் ஹரிக்கேன் சென்டர், விக்கிபீடியா
இந்தியாவைக் கலக்கப் போகும் ப்ரியா, நிஷா, நிலோஃபர்
May 20th, 2006 4 comments
சுஜாதாவின் சில்வியா
May 16th, 2006 4 comments
வெகு நாள் கழித்து விகடனில் சுஜாதா அவர்கள் புதிய தொடர்கதை எழுதுகிறார் என்று கேள்விப்பட்ட அடுத்த நொடி ஓடிச் சென்று விகடன் வாங்கி விட்டேன். சுஜாதா அவர்களின் எழுத்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்பதால் பல எதிர்பார்ப்புகள் எனக்கு. அதிலும் கணேஷ் வசந்த் நாவல் என்பதால் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகவே இருந்தது. வழக்கம் போல் கலர் கலராக படம் போட்டிருந்த விகடனின் டெம்ப்டேஷனை எல்லாம் தாண்டி, சுஜாதா பக்கத்திற்கு வந்தேன். கிடைத்தற்கரிய செப்பேடு கிடைத்துவிட்டாற்போல வாசிக்கத் தொடங்கினேன். கதை எனக்குப் பரிச்சயமான ஜி.என்.செட்டி ரோட்டில் தொடங்குகிறது. பொதுவாக சுஜாதா நாவல்களை வாசிக்கும்போது இருக்கும் 'அட…' என்ற ஃபீலிங் இதில் அவ்வளவாக இல்லை. சுஜாதா தம்முடைய வழக்கமான க்ளீஷேக்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக கதையோடும் நடையோடும் ஒட்டி விளையாடும் அவருடைய நையாண்டிகள், இதில் கொஞ்சம் ஓவர் யூஸ் செய்யப்பட்டது போல தோன்றுகிறது. எனக்கு மட்டும் தான் இப்படித் தோன்றுகிறதா, இல்லை வாசகர்கள் பலருக்கும் இதே கருத்து இருக்கிறதா என்று தெரியவில்லை. 'டைலாமோ' பாடல், கானா உலகநாதன் – என்று இன்றைக்கிருக்கும் சென்ஸேஷன்களைத் தான் ஃபாலோ அப் செய்வதை வலுக்கட்டாயமாகப் பிரகடனப்படுத்தாமல் இருந்திருக்கலாம். இன்னும் அவருடைய அதே பாணியைத் தான் கையாள்கிறார் என்றாலும், சிறு தொய்வு தெரிகிறது. பொதுவாகப் பெண்களிடம் "உங்களை ஒரு அரங்கேற்றத்தில் பார்த்திருக்கேன்" என்று சொல்லிக் கடலை போடும் வசந்த், இதில், "உங்களை ஒரு ரேம்ப்வாக்கில் பார்த்திருக்கேன்" என்று சொல்வது ஒரு முன்னேற்றம்
மற்றபடி இக்கதையின் தொடக்கம் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. சுஜாதா எழுதினாரா, இல்லை, சுஜாதாவின் நடையில் எழுதத் துடிக்கும் எண்ணற்றவர்களில் யாரோ எழுதினார்களா என்று எண்ணும்படி உள்ளது
அவர் நடையிலேயே சொல்வதென்றால், ஜல்லியடிக்கிற சமாசாரம் தான். "அப்படீன்னா?" என்றார் வசந்த். "அப்படியா?" என்றார் கணேஷ். -ரசிக்கும்படி இருந்ந்தது. சுஜாதாவை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு ஞனமோ அனுபவமோ இல்லை என்றாலும், அவரின் நீண்ட நாள் ரசிகன் என்ற முறையில் என் கருத்துகளைத் தான் பதிந்தேன். முதல் அத்தியாயம் தான் முடிந்திருக்கிறது. இன்னும் போகப் போக அவருக்கே உரிய ஸ்டைலில் கதை நகரும் என்று நம்புவோம்.
பிச்சாவரம் வனப்பகுதி – ஓர் இனிய அனுபவம்
May 14th, 2006 12 comments
‘ஏவிசினியா மெரினா’ என்று அந்தப் படகோட்டி, மேங்குரோவ் மரங்களின் அறிவியல் பெயரைக் கூறிய போது, நான் ஒரு கணம் வாயடைத்துப் போனேன் – நானே பள்ளியில் படித்து மறந்து போன இப்பெயரை படிப்பறிவில்லாத இவர் இவ்வளவு அழகாகச் சொல்கிறாரே என்று. பின்னர் தான் தெரிந்தது, இப்பெயரை அங்குள்ள படகோட்டிகள் யாவரும் சொல்வார்கள் என்று. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதி, கோடை வெயிலைத் தணிக்கும் ஒரு இனிய மாலைப் பொழுது அனுபவமாகவே அமைந்தது. சிறு வயதில்
பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்த போது, தாவரவியல் பாடத்தில் சுவாசிக்கும் வேர்கள் (Respiratory Roots) பற்றி படித்தது நன்றாக நினைவிலிருக்கிறது. சதுப்பு நிலப்பகுதிகளில் வளரும் மேங்குரோவ் மரங்கள், தண்ணீர் பரப்புக்கு மேல் விரல்களைப் போல நீட்டிக் கொண்டிருக்கும் வேர்களைக் கொண்டவை. அவ்வேர்களில் தான் அம்மரங்கள் சுவாசிப்பதற்கான துவாரங்கள் அமைந்துள்ளன. பக்கவாட்டில் வளரும் வேர்களிலிருந்து, மேல்நோக்கி வளரும் இந்த சுவாசிக்கும் வேர்கள், நேரே மேல்நோக்கி வளர்ந்து, அம்மரங்களின் கிளைகளில் முட்டி ஐக்கியமாகின்றன. தாவரவியல் பாடப்புத்தகத்தில் பார்த்த அம்மரத்தின் வரைபடங்கள் நேரில் பார்த்த போது அந்த இயற்கையின் விந்தை அழகை இன்னும் பல மடங்கு அதிகமாகவே ரசிக்கும்படியாக இருந்தது. ஒரு வாரம் சிதம்பரதில் தங்க வேண்டிய அவசியம் எனக்கு. கோடை சூரியன் – உச்சியைப் பிளக்கிற வெயில் – மொத்த வெப்பமும் சிதம்பரத்தின் மீதே கோட்டுகிறதோ என்னும்படி அப்படியொரு வெயில். பல நாட்களாய் கேள்விப்பட்டிருந்த சிதம்பரதின் பெருமையெல்லாம் எனக்கு மறந்துபோய், இனி இவ்வூர் பக்கம் வரவே கூடாது என்று முடிவெடுக்கும்படி ஆகிவிட்டேன். ஆனால், பிச்சாவரம் போய் வந்த அம்மாலைப் பொழுது மட்டும் என்றும் நினைவிலிருக்கும் கணமாக என் மனதில் பதிந்துபோனது. சிதம்பரம் வரும் முன்பே, பிச்சாவரம் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன். சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம். சிதம்பரத்தில் நாங்கள் தங்கியிருந்த லாட்ஜின் கண்காணிப்பாளரிடம் கேட்டேன். ‘பஸ் இருக்கு சார். பிச்சாவரம் வனப்பகுதின்னே போட்டிருப்பான். கரெக்டா ஒன் அவர் ஆகும்’ என்றார். 17 கி.மீ. போக எதற்கு ஒரு மணி நேரம் என்று நினைத்தேன். ஆனால் போகப் போகத்தான் எனக்கு விளங்கியது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ‘முடசலோடை’ என்று ஒரு பக்கமும், ‘பிச்சாவரம்’ என்று ஒரு பக்கமும் போட்டிருந்த பேருந்து வந்து நின்ற மாத்திரத்திலேயே ஃபுல். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, டர்க்கி டவல் போட்டு, வீரப்பன் மீசை சகிதமாக நின்றிருந்த ஒருவரிடம் கேட்டேன். ‘இது தான் தம்பி, வாங்க நானும் அங்க தான் போறேன்’ என்றார். ஏறிக்கொண்டோம். சீட் கிடைக்கவில்லை என்றாலும், ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுடைய நான், டிரைவர் அருகில் நின்று கொண்டேன். சிதம்பரம் நகர எல்லை வரை நல்ல தார்ச் சாலைகள் போட்டிருந்தார்கள். சில கிலோமீட்டர் போன மாத்திரத்தில் பேருந்தின் டயர்களைக் கூடக் கொள்ளும் அளவு இல்லாத மிகக் குறுகிய சாலை ஆரம்பமானது. கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு சுற்றுலாத் தலமான பிச்சாவரத்திற்குப் போகிற சாலை இப்படியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்னுடன் வந்திருந்த வட இந்திய நண்பர்கள், ‘டீக் ராஸ்தா ஹெய் நா?’ என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே வந்தார்கள். நானும் மீசைக்காரரிடம் இரண்டு முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். எதிரே வந்த புல்
லட் வண்டிகளுக்கெல்லாம் ஒரு நிமிடம் நின்று, ஒதுங்கி, ஓட்டுவதென்றால், 17 கி.மீ. போக ஏன் ஒரு மணி நேரம் ஆகாது? எப்படியோ, பிச்சாவரம் போய் சேர்ந்தோம். ஒரு அண்ணா சிலை, ஒரு TTDC படகு நிலையம், ஒரு சில நாற்காலிகள். இது தான் பிச்சாவரம். TTDC (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்) அலுவலகத்தில் டிக்கெட் வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு படகிற்கு ஒரு மணி நேரத்திற்கு 125 ரூபாய். 5 நபர்கள் போகலாம். இல்லை, நான் தனியாகத் தான் போவேன் என்று நீங்கள் அடம் பிடித்தாலும், 125 ரூபாய் நிச்சயம் கொடுக்க வேண்டும். டிக்கெட் வாங்கிக் கொண்ட பிறகு, படகுத்துறையின் வாயிலில், வனத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம் நிச்சயமாக ஆளுக்கு 50 பைசா கட்ட வேண்டும். நீங்கள் வெறுமனே கையில் கேமரா வைத்திருப்பவரானால் பரவாயில்லை. ஆனால், அதை பயன்படுத்திப் புகைபடம் எடுப்பவரானால், அதற்கான கட்டணத்தை இவர்களிடம் செலுத்த வேண்டும். நடைமுறைகள் எல்லாம் முடிந்து நானும் நண்பர்களும் படகில் ஏறிக் கொண்டோம். படகோட்டி, இக்காடுகள் பற்றி சொல்லிக் கொண்டே வந்தார். சுமார் 3000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மேங்குரோவ் காடுகள் இந்தியாவில் இரு இடங்களில் தான் இருக்கின்றனவாம். ஒன்று, கோல்கத்தா அருகே சுந்தர்வன் காடுகளிலும், அதன் பிறகு பிச்சாவரத்தில் தான் இருக்கிறது என்றார். பேக்வாட்டர் எனப்படும் இந்நீர்நிலை, கடலோடு நேரடியாக இணைப்புள்ளது. கேரளத்தில் பிரசித்தமான இத்தகைய பேக்வாட்டர்களை தமிழகத்தில் இப்போது தான் காண்கிறேன். ஆழம் 3 அடி தான் இருக்கும், ஆனால் அடியில் சதுப்பு நிலம் என்பதால் ஒரு ஆள் உயரம் தண்ணீர் இருக்கும் என்றார் படகோட்டி. சரத்குமார் நடித்த ‘சூரியன்’ படத்தின் சண்டைக் காட்சிகள் இங்கு தான் படமாக்கப் பட்டனவாம். புரட்சித்ததலைவர் எம்.ஜி.ஆர் படத்திலும் வந்திருக்கிறது என்றார். பின்னர் மேங்குரோவ் மரங்கள் எங்கள் அருகில் வந்தன. படகை அம்மரங்களின் ஊடே செலுத்திய போது, என் அறிவியல் ஆசிரியை போதித்த ஏவிசினியா மரங்களை நேரில் பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைத்தது. இரண்டு ஆள் உயரமிருக்கும் மரங்கள். தண்ணீர் பரப்பின் மேல் முளைத்து வளரும் வேர்கள். புதர் மாதிரி நிறைய இலைகள். அம்மரங்களின் அடியில் எல்லாம் நிறைய நண்டுகள் இருந்தன. நரிகளைக் கூட காணமுடியும் என்றார் படகோட்டி. ஆனால், நாங்கள் நரி எதையும் பார்க்கவில்லை. கோடைக் காலம் என்பதால் பறவைகளும் அதிகம் இல்லை. ஆனால், சுற்றி இருக்கும் மரங்கள் நடுவே படகில் போவது, ஏதோ ‘அனகோண்டா’ காடுகளில் பயணிப்பது போன்று ‘த்ரில்லிங்’காக இருந்தது. ஆயிரக்கணக்கான கால்வாய்கள் இங்கிருந்து பிரிந்து செல்கின்றனவாம். ஒரு மணி நேரம் அவிசினியா மரங்களை ரசித்தோம். இவற்றின் அறிவியல் சமாச்சாரங்களை என் வட இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தேன். சூரியன் மறைகிற சமயம் என்பதால், குளிர்ச்சியாக இருந்தது. சிதம்பரத்தில் தங்கியிருந்த ஒரு வாரத்தில் குளிர்ச்சியாயிருந்தது என்று சொல்லக்கூடிய ஒரே சந்தர்ப்பம் இது தான். சுனாமி வந்த போது, 20 அடிக்கு நீர் மேலெழுந்ததாம். இம்மரங்கள் தான் நீரின் வேகத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தினவாம். கால்வாய்களின் வழியாக நீர் பிரிந்து விட்டதால், பாதிப்புகள் அதிகம் இல்லை என்றார். ஆனாலும், அருகே எம்.ஜி.ஆர். குப்பத்தில் இருந்த பல நூறு குடும்பங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ‘இந்த வழியாத்தான் சார் பொணங்கள் எல்லாம் போச்சு’ என்று அப்படகோட்டி சொன்ன போது, அவர் கண்கள் கலங்கின. சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு வழியாக, பிச்சாவரம் சுற்றுலா முடிந்து சிதம்பரம் நோக்கிப் பயணப்பட்டோம். அதே குறுகலான பாதையில் 17 கி
.மீ. அதே ஒரு மணி நேரம். ஏவிசினியா மரங்களைப் பார்த்தது, ஏதோ சொந்தக்காரர்களைப் பார்த்துவிட்டு வந்தது போல மனதிற்கு இதமாக இருந்தது.


