சில ஞாபகங்கள்

May 31st, 2005       9 comments

பின்புறத்தில் சற்றே பெருத்து, கிக் ஸ்டார்ட் செய்யப்படும் ஒரு மாதிரியான ஆட்டோக்களை என் சொந்த ஊரில் தான் பார்த்திருக்கிறேன். கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம், பெயர் 'கொப்பா'. Michael Crichton-னின் State of Fear-இல் எவ்வளவு தான் இயற்கையைத் திட்டி, கன்னாபின்னாவென்று விமர்சித்திருந்தாலும், நாலாபுறமும் மலைகள் மலைகள் என்று இருக்கிற ஊரைப் பார்க்கும் போது, மனம் அதில் லயித்து விடுவதில் ஆச்சரியமில்லை. முணுமுணுப்பது போல் வேகமாகப் பேசுகிற மைசூர் கன்னடம், மணிரத்தினம் பட வசனம் போல அவ்வளவு ஸ்பஷ்டமாகப் புரியாவிட்டாலும், சென்னை செந்தமிழைக் கொஞ்ச நாள் மறக்கடித்து விட்டதென்னவோ உண்மைதான்.  மலையிலிருந்து பொங்கிவரும் ஓடை நீரில் குளித்த போது, அங்கே மரநிழலில் ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவர்கள் இன்னும் என் கண்களில் நிற்கிறார்கள். என் சிறுவயதில் இப்படியெல்லாம் ஓடைப்புறத்தில் விளையாட வாய்த்ததில்லையே என்ற ஏக்கம் நிறைய உண்டு. சென்னையில் அதிகம் ஊஞ்சல்கள் நான் பார்த்ததில்லை. சங்கிலியில் தொங்கும் மர ஊஞ்சல்களை மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் நண்பர்கள் வீடுகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதில் எல்லாம் வாண்டுகள் விளையாட முடியாது. அவர்களின் dynamic தேவைகளுக்கு ஈடு தரும்படியாக இருப்பவை மரக்கிளையில் கட்டிய ஊஞ்சல் தான். என் வீட்டில், நான் விளையாடுவதற்காக என் தாத்தா ஒரு ஊஞ்சல் கட்டித் தந்திருந்தார் – கொய்யா மரக்கிளையில். வருடாவருடம் கட்டித்தருவார். நானும் வருடாவருடம் அதன் பிரேக்கிங் பாயிண்ட் வரும் வரை அதில் ஆடி ஆடி, சட்டென்று அது அறுந்து தொபீர் என்று நான் கீழே விழும் போது, மிகப்பெரிய சாதனை செய்தது போன்ற ஒரு பூரிப்பு உண்டாகும். இப்போதெல்லாம் கூடத் தாத்தாக்கள் மரக்கிளை ஊஞ்சல்கள் கட்டித் தருகிறார்களா என்பது தெரியவில்லை. கன்னடம் சரியாகப் பேசத் தெரியாமல், கடைக்காரரிடம் எக்குத்தப்பாகப் பேசி, பின் அசடு வழிந்த கதையை முன்னொரு பதிவில் சொல்லியிருக்கிறேன். அது அப்படி என்றால், இன்று கூட, பள்ளி வகுப்பில் என்னோடு படித்த தோழியிலிருந்து, எனக்கு சுரம் வந்தால் ஊசி போடும் டாக்டர் வரை எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி, நீ இப்போதாவது தமிழ் பேசக் கற்றுக்கொண்டாயா?என்பதுதான். இருந்தாலும், ராஜ் டிவி கோலிவுட் டயரியைத் தொகுத்து வழங்கும் பெண் பேசும் டமிலை விட, என் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு, நகர்ந்துவிடுவேன். ஊரில், மலைச்சரிவை ஒட்டியே கட்டப்படும் வீடுகளும், வீட்டுக் கொல்லையில் விடியற்காலை வந்து கிரீச்சிடும் மயில்களும், நாலடிக்கு ஒன்றாக அகப்படும் பாம்புகளும், தோட்டத்தில் காலில் ஒட்டிக் கொள்ளும் அட்டைகளும், ராத்திரி வேளைக் கார் பயணங்களில், ஆங்காங்கே அமைதியாக சாலையைக் கடக்கும் சிறுத்தைகளும், சில சமயம் அரிதாகத் தென்படும் யானைகளும், மரமேனிகள் அனைத்திலும் நட்சத்திரமாய் ஜொலிக்கும் மின்மினிப்பூச்சிகளும், சென்னைக்கு வந்தால் மிகவும் ரிமோட்டாகப் படுகின்றன. ghat section என்று சொல்லி, மெதுவாக, ஸ்டியரிங்கை ஒடித்து ஒடித்து ஓட்டும் லாவகம், உஸ்மான் ரோட்டிலும், கோடம்பாக்கம் ஹை ரோட்டிலும் கூடத் தேவைப்படுவது தான் ஒரே ஒற்றுமை. பல வருடங்களுக்கு முன்னால், நான் சென்றிருந்த போது, ஊர்க்கோயில் திருவிழா நடைபெற்றதுண்டு. அங்கே, 'ஜாத்ரே' என்பார்கள். மெட்ராஸிலிருந்து சென்றவன் என்கிற முறையிலும், அவ்வூரில் பிரசித்தமான குடும்பம் என்பதாலும், திருவிழாவிலும் ஊரிலும் எனக்குப் பல சலுகைகள் நிச்சயம் உண்டு. வாட்ச் மிட்டாயும், மேஜிக் கண்ணாடியும் இலவசமகப் பெற்றிருக்கிறேன். ச
கரித்து வைத்திருந்த WWF கார்டுகளை எக்ஸ்சேஞ்ச் செய்து, மயிற்பீலியும், பாட்டிலில் அடைத்த மின்மினிப்பூச்சியும் வாங்கியிருக்கிறேன். நான்கு பென்ச் போட்ட பெட்டிக்கடை ஹோட்டலில் ராகி மால்ட்டும், கட்பட் ஐஸும் (நம்மூர் ஃபலூடா), மசால் மண்டக்கியும் (அரிசிப் பொரி) கேட்பாரின்றி விழுங்கியிருக்கிறேன். துங்கா நதிக்கரையோரம் முழுதும் நிரம்பிய கூட்டத்தின் நடுவே வாணவேடிக்கைகளைப் பார்த்து, ஆவென்று வாய்பிளந்து ரசித்திருக்கிறேன். திருவிழாவில் தொலைந்திருக்கிறேன். கிணற்றில் நீந்தியிருக்கிறேன். மாட்டுவண்டி ஓட்டியிருக்கிறேன். சைக்கிளில் ஸ்கூலுக்குப் போய், ஸ்கூல் லீடர் என்ற பெயரில் கொஞ்சம் பஞ்சாயத்தெல்லாம் செய்து, நண்பர்களை விரட்டி ஆடி, குரூப் பையன்களையும் பெண் பிள்ளைகளையும் குச்சியால் அடித்து மிரட்டி, லன்ச் பிரேக்கில் ஹோம்வொர்க் செய்து, பெல் அடித்ததும் சைக்கிளிலேயே வீடு திரும்பி, டிவி முன் ஐக்கியமாகும் சமர்த்தான சென்னைப் பையனாக வளர்ந்த எனக்கு, ஊரும், திருவிழாவும், வயல் வரப்பும் மறக்க முடியாத அத்தியாயங்கள். ஆனால், இப்போதெல்லாம் ஊர் மாறவில்லை. திருவிழா மாறவில்லை. வயலும் கிணறும்

புதிரல்ல… புதிர்! (சிறுகதை)

May 13th, 2005       1 comments

ஆங்கில எழுத்தாளர் Oscar Wilde எழுதிய சிறுகதையான "The Sphinx without a Secret" என்பதைத் தழுவி இந்தச் சிறுகதையை எழுதியுள்ளேன். கதையை அப்படியே மொழிபெயர்க்காமல், நமது சூழல்களுக்கு ஏற்ற விதத்தில் தமிழ்ப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பட்டதால், கதையை remake செய்தேன் எனலாம். இருப்பினும், கதைக் கரு, ஆஸ்கர் வைல்டினுடையது தான்.
* * * * *
அன்று மாலை, திநகர் கண்ணதாசன் சிலைக்கு எதிரே உள்ள தெருவில் நான் தைக்கக் கொடுத்த செருப்பை வாங்கப் போனேன். மண்டையைப் பிளக்கிற இந்த வெயிலிலிருந்து என்று தான் விடிவோ என்று பெருமூச்சு விட்டவனாய் திரும்பிய எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. எதிரில் கண்ணன் நின்றிருந்தான். கண்ணன் என்றால், என் குறைதீர்க்க வந்தப் பரந்தாமன் கண்ணன் இல்லை. இவன் என் பாலிய நண்பன். பள்ளி, கல்லூரி என்று தொடர்ந்து என் கூடவே படித்தவன். பத்து வருஷங்களுக்கு முன்னால் அவனைக் கல்லூரியில் பார்த்தது. "ஹாய்! வாட் எ சர்ப்ரைஸ்" என்று பளீர் புன்னகையோடு கைக்குலுக்கினேன். அவனும் கைக்குலுக்கிவிட்டு லேசாகச் சிரித்தான். சிரிப்பில் சுருதியில்லை. படபடவென்ற அவன் பேச்சும், கோல்கேட் சிரிப்பும் அவன் முகத்தில் எங்கேனும் மிச்சம் மீதி இருக்கிறதா என்று தேடினேன். ஊஹூம். "என்னடா டல்லா இருக்கே? ம்ம்ம்… உனக்கு கல்யாணமாயிடுச்சு, அதானே?" என்றேன், சற்று நக்கலாகவே… "என்னால இந்தப் பெண்களை புரிஞ்சிக்கவே முடியலடா" என்றான். "கண்ணா, என்ன, புதுசா philosophy படிக்றியா? ஓகே ஓகே, யார் அந்த பொண்ணு?" "இங்க ஒரே கூட்டமா இருக்கு… வேற எங்காவது போய் பேசலாமே" அடுத்த நிமிடம், ஆட்டோவில் நுங்கம்பாக்கம் நோக்கிப் பயணமானோம். "எங்கடா போலாம்? நீயே சொல்லு" – இது நான். "எங்கயாவது அமைதியா இருந்தா சரி" – கண்ணன். நுங்கம்பாக்கம் ஹை ரோடில், 'பரிஸ்தா'வில் கூட்டம் அதிகமாக இல்லை. ஆர்டர் செய்த சான்விச்சை மெல்ல கொரித்துக் கொண்டே கேட்டேன், "இப்ப சொல்லுடா". கண்ணன் கொஞ்சம் மௌனமாயிருந்தான். கண்களை மூடிக் கொண்டான். எதையோ யோசிப்பது போல இருந்தது. பிறகு, தன் கையில் வைத்திருந்த தோல்ப்பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து என்னிடம் கொடுத்தான். மெல்ல அதைத் திறந்து பார்த்தேன். ஒரு பெண்ணின் படம். மன்னிக்கவும்… ஒரு அழகான பெண்ணின் படம்! 'அழகான' என்று சொல்லும் போதே, எல்லாம் அதில் ஐக்கியம். பெரிய கரிய கண்கள், நேர்த்தியான மூக்கு, சிவந்த உதடுகள் – ஒரு முறை பார்த்தாலே காதல் பண்ணலாம் என்று தோன்றியது. போதாக்குறைக்கு, ஒரு மெல்லிய, மிகமெல்லிய புன்னகை – அவள் உதடுகளில். "இவளைப் பத்தி நீ என்ன நினைக்கிற? இவள் நம்பகமானவளா தெரியறாளா?" பார்த்தவுடன் எதையும் சொல்லத் தோன்றவில்லை. எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம். அழகு என்றாலே ஆபத்து என்று யாரோ சொல்லியிருக்கிறார்களே… புன்னகை வேறு. இலக்கணப்படி பார்த்தால், அவளை நம்புவதும் கஷ்டமாகத்தான் இருந்தது… ஆனால்… "உன்னை தாண்டா கேக்கறேன்… இவளைப் பத்தி என்ன நினைக்கறே சொல்லு" "நீ கேக்றதே புதிராத்தான் இருக்கு. இவ கிட்ட இருக்கிற மோனாலிசா புன்னகை வேற… சரி, விஷயம் என்ன… புரியறா மாதிரி சொல்லு" வெய்ட்டர் வந்து தண்ணீர் ஊற்றிச் செல்லும் வரை அமைதியாய் இருந்தான். அதன் பின்னால் இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினான். கதை உங்கள் பார்வைக்கு இதோ: ஒரு நாள் காலை நான் ஆஃபீஸ் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், அடையாறு சிக்னலில் பச்சை விழுவதற்காக காத்திருந்தேன். டிஜிட்டலில் 85, 84, 83… என்று மிக மெதுவாக வினாடிகள் குறைந்து கொண்டிருந்ததால், சுற்று முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, பக
கத்தில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து இவள் வேகமாக வெளியில் வந்தாள். சடாரென்று ஒரு ஆட்டோவைப் பிடித்தாள். சிக்னல் பச்சைக்கு மாறிவிடவே, ஆட்டோ கடகடவென ஓடி மறைந்தது. அதோடு அவளும் மறைந்தாள். அவளைப் பார்த்த நிமிடமே அவளிடம் எனக்கு ஒரு வகை ஈர்ப்பு உண்டாகியது. வீட்டுக்குப் போனேன். டிவி பார்த்தேன். அவள் நினைவுகள் மட்டும் அகலவேயில்லை. இரவெல்லாம் அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு அடுத்த நாள் அவள் அடையாறு சிக்னலில் தென்படுகிறாளா என்று தேடினேன். அதன் மறுநாளும் தேடினேன். அவள் காணக் கிடைக்கவேயில்லை. அப்புறம் அவளை மறந்து போனேன். அடுத்த வாரம் என் நண்பன் ஒருவன் சவேராவில் பார்ட்டி என்று வரச்சொல்லியிருந்தான். போனேன். பார்ட்டியில் பாட்டு டான்ஸ் என்று அமர்க்களமாக இருந்தது. திடீரென்று…. என்ன ஆச்சரியம்! அடையாறில் பார்த்த அவள், பார்ட்டியில்! நண்பன் அவளை எனக்கு அறிமுகம் செய்தான். "மிஸ் மேகா. மிஸ் மேகா, திஸ் இஸ் கண்ணன்". லேசாகப் புன்னகைத்தாள். அவளின் மோனாலிஸா புன்னகை. "மேகா, நான் உங்களை ஒரு வாரம் முன்னால அடையாறு சிக்னல்ல பார்த்தேன்". அவள் கொஞ்சம் ஷாக் அடித்தது போல அதிர்ந்தாள். பின்னர், மிக மெல்லிய குரலில், "சத்தமா பேசாதீங்க. யாராவது கேட்டுட போறாங்க" என்றாள். ஒரு அழகான பெண்ணிடம் பேசப் போய் இப்படி அசட்டுத்தனமாக ஆனது எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பிறகு, நிறைய பேசினோம். இல்லை இல்லை, பேசினேன். அவள் கொஞ்சமாக, அளந்து அளந்துப் பேசினாள். யாராவது கேட்டுவிடப் போகிறார்கள் என்ற அச்சத்துடன் பேசுவது போல இருந்தது. என்னவானாலும் சரி, இவளைக் காதல் பண்ணியே தீருவேன் என்று என் மனம் துள்ளியது. அவளைச் சுற்றியிருந்த அந்த மர்மம் கூட, அவள் மேலான மயக்கத்தை அதிகரிக்கத்தான் செய்தது. பார்ட்டி முடிந்து அவள் போகும் போது, "மேகா, நாம் மறுபடியும் எப்ப சந்திக்கலாம்?" என்றேன். அவள் சற்று தயங்கினாள். யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். "நாளை மாலை 5 மணிக்கு இங்கேயே சந்திக்கலாம்" என்றாள். வேகமாய் மறைந்து போனாள். அடுத்த நாள் 4.45 மணிக்கே சவேரா போனேன். "இப்பத்தான் கெளம்பிப் போனாங்க" என்றான் வாட்ச்மேன். எனக்கு பலத்த ஏமாற்றமாக இருந்தது. நண்பனுக்கு டெலிஃபோன் செய்து அவள் அட்ரஸை வாங்கினேன். 'மேகா, உன்னைப் பின்னால் எப்போது சந்திப்பது?' என்று கேட்டு அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை அவளுக்குப் போஸ்ட் செய்தேன். இரண்டு வாரமாகியும் பதில் வரவில்லை. பிறகு, மேகா கொடுக்கச் சொன்னதாக என் நண்பன் எனக்கு ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். பிரித்துப் படித்தேன். 'வரும் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருப்பேன், அப்போது சந்திக்கலாம்' என்று எழுதியிருந்தாள். அடியில், பின்குறிப்பு என்று போட்டு 'என் வீட்டிற்குக் கடிதம் எழுத வேண்டாம். விவரத்தை நேரில் சொல்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது. ஞாயிறு அன்று அவளைச் சந்தித்தேன். மிக எதார்த்தமாகப் பழகினாள். அவள் மீதான என் காதல் அதிகமாவது போல் தோன்றியது. அன்று நான் கிளம்பும் முன் மிக ரகசியமாக என் அருகில் வந்து சொன்னாள்: "அடுத்த முறை எனக்கு கடிதம் போடறப்ப, திருமதி இந்திரா, ரீடர்ஸ் பாயிண்ட், காலேஜ் ரோடு அப்டீங்கற அட்ரஸ்க்கு எழுதுங்க. சில பர்சனல் காரணத்துக்காக என் வீட்டுக்கு லெட்டர் போடாதீங்க ப்ளீஸ்" அதற்கப்புறம் அவளை நிறைய சந்தித்தேன். அவளின் மர்மமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தது. சில சமயம் அவள் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருக்கிறாளா என்று நினைத்தேன். இருக்க முடியாது. அவளே மிகவும் ரிஸர்வ் டைப் போலத் தோன்றினாள். அவளின் மர்மத்திற்கு மோனாலிஸாவே தேவலாம் போலத் தோன்றியது. இறுதியாக ஒரு நாள
் முடிவு செய்து விட்டேன். அவளை நான் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தேன். அவளிடம் இருந்த மர்மங்கள் என்னைத் தடுக்க முடியாது என்று உறுதியாயிருந்தேன். அவள் கொடுத்த முகவரிக்கு அன்று இரவே ஒரு கடிதம் எழுதினேன். 'என்னை திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு சந்திக்க முடியுமா?' என்று அக்கடிதத்தில் கேட்டிருந்தேன். 'சரி' என்று பதில் எழுதினாள். அன்று நான் தான் உலகத்திலேயே சந்தோஷமான ஆள் என்று தோன்றியது. அவளிடம் என்னமோ இருக்கிறது. அவளின் மர்மங்களைத் தாண்டியும் அவள்பால் ஈர்க்கப்படுவதாக எண்ணினேன். ஆனால் இப்போது யோசிக்கும் போது தோன்றுகிறது. நான் அவளை உண்மையாகவே காதலித்தேன். ஆனால், அவளது மர்மம்: அது மட்டும் என்னை வாட்டி எடுத்தது. ஏன் தான் இப்படி ஒரு போராட்டமோ… கடவுளே! "அப்ப அவளோட மர்மத்த நீ கண்டுபிடிச்சுட்டியா?" கண்ணனின் கதையில் ஐக்கியமாகிப் போன நான் கேட்டேன். "அதை நீதான் சொல்லணும்" என்றான். திங்கள்கிழமை. நான் மேகாவிடம் என் காதலைப் ப்ரொபோஸ் செய்யப் போகிற நாள். அன்று காலை முதலே நெர்வஸாக இருந்தேன். ஆஃபீஸுக்கு லீவ் சொல்லிவிட்டேன். மயிலாப்பூரில் இருக்கிற என் மாமாவைப் போய்ப் பார்த்தேன். திரும்புகையில், ட்ராஃபிக் ஜாமாகி இருந்தது. ஒரு சின்ன, மிகச் சின்ன சந்தில் நுழைந்தேன். எதிரில் திடீரென்று மேகா தோன்றினாள். தெருமுனையில் சென்றுகொண்டிருந்தாள். அவள் என்னைக் கவனிக்கவில்லை. மிகவும் ஜாக்கிரதையாக, எப்போதும் போல, எல்லா புறமும் பார்த்து, அந்தத் தெருக்கோடியில் இருந்த வீட்டினுள் நுழைந்தாள். "ஆஹா, இதுதான் உன் மர்மமா?" என்று என்னிடமே சொல்லிக்கொண்டேன். நேரே அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். ஏதோ தங்கும் விடுதி போல இருந்தது. கீழே பார்த்தேன். அவசரத்தில் அவள் தன் கைக்குட்டையை நழுவ விட்டதைக் கவனிக்காமல் உள்ளே போயிருந்தாள். அதை எடுத்து என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ஒரு நிமிடம் என்ன செய்வது என்று யோசித்தேன். சரி, அவளின் பர்ஸனல் விஷயத்தில் மூக்கை நுழைப்பானேன்… அவளிடம் நேராகவே கேட்டு விடலாம் என்று தீர்மானித்து அங்கிருந்து நகர்ந்தேன். மாலை 6 மணிக்கு அவள் வீட்டிற்குப் போனேன். சோஃபாவில் சாய்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஒற்றைச் சரடு முத்துமாலை மங்கலான ஒளியில் மின்னியது. அவள் தேவதையாகத் தெரிந்தாள். "வாங்க கண்ணன், காலைலேர்ந்து எங்கயும் போகாம வீட்லியே இருந்தேன். ரொம்ப போரடிக்குது" என்றாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். மௌனமாய் அவளைப் பார்த்தேன். என் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து அவள் முன் வைத்தேன். "மேகா, இத நீ இனிக்கு காலையில மயிலாப்பூர்ல தவற விட்டுட்ட" என்றேன். அவள் ஷாக் அடித்து என்னைப் பார்த்தாள். அந்த கைக்குட்டை மேடை மேலேயே கிடந்தது. "அங்க நீ எதுக்கு போன?" என்றேன். "அதை கேக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?" "உன் கணவனாகப் போற உரிமை. நீ என்னை கலியாணம் பண்ணிக்றியானு கேக்கத் தான் வந்தேன்" அடுத்த வினாடி அவள் கண்களில் கண்ணீர். முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். "நீ என்கிட்ட சொல்லியே ஆகணும்" அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். என்னை நேரே பார்த்தாள். "மிஸ்டர் கண்ணன், உங்க கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்ல" என்றாள். "நீ யாரையோ பார்க்கப் போயிருக்க. இது தான் இத்தனை நாளா நான் உன்னப்பத்தி தேடிட்டிருந்த மர்மம்" அவள் கன்னம் சிவப்பானது. "நான் யாரையும் பார்க்கப் போகலை" "நீ உண்மையே பேச மாட்டியா?" "உண்மை என்னன்னு சொல்லிட்டேன்" என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவளை என்னென்னவோ சொல்லித் திட்டினேன். வேகமாக அங்கிருந்து என் வீட்டிற்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதனை
் பிரித்துப் பார்க்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டேன். வேலை நிமித்தமாக பெங்களூர் போய் விட்டேன். ஒரு மாதம் கழித்துத் திரும்பினேன். நேரே மேகாவைப் பார்க்கப் போனேன். அவள் இறந்து போயிருந்தாள். திடீரென்று குளிர் ஜுரம் ஏற்பட்டு, நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்து போனதாகச் சொன்னார்கள். நான் பைத்தியமாகிப் போனேன். உலகமே வெறுத்துப் போனது. அவளை அப்படி நேசித்தேனே… எல்லாம் கனவாகிப் போனதே என்று வருந்தினேன். கடவுளே, எல்லாவற்றையும் பிடுங்கி விட்டாயே என்று அழுதேன். "டேய் கண்ணா, நீ மயிலாப்பூர்ல அந்த மர்ம வீட்டுக்குப் போனியா இல்லியா?" – இது கதை கேட்டுக் கொண்டிருந்த நான். "போனேன்" மேகாவின் மர்மத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னத்தான் ஆகிறது பார்க்கலாம் என்று ஒரு நாள் அந்த வீட்டுக்குப் போனேன். கதவைத் தட்டினேன். ஒரு வயதான அம்மாள் கதவைத் திறந்தாள். தங்குவதற்கு ஏதாவது ரூம் கிடைக்குமா என்று கேட்டேன். "ஒரு பெரிய ரூம் இருக்கு. அதில தங்கியிருந்த பொண்ணு மூணு மாசமா காணோம். வாடகை பாக்கியிருக்கு. நீங்க வேணும்ணா அந்த ரூமை எடுத்துக்கோங்களேன்" என்றாள். அவள் போட்டோவைக் காட்டிக் கேட்டேன், "இவ தான் அந்தப் பொண்ணா பாருங்க" "இவங்களே தான் சார், எப்ப வர்றாங்க இவங்க?" "இவ எறந்துட்டா" "ஓ, என்ன சார் ஆச்சு அவங்களுக்கு. அவங்கள என்னால புரிஞ்சிக்கவே முடிஞ்சதில்ல. வருவாங்க, ரூம்ல உக்கார்ந்து ஏதாச்சும் படிப்பாங்க, சும்மா அந்தரத்த பார்த்துட்டிருப்பாங்க, டீ சாப்பிடுவாங்க, அவ்வளவுதான்" "அவ இங்க யாரையாவது சந்திப்பாளா?" "அதெல்லாம் இல்ல சார். ரொம்ப நல்லவங்க. நிறைய பணம் கொடுப்பாங்க" அதன் பிறகு அவளிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளிடம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். "இப்ப சொல்லு, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? அந்த பொம்பள உண்மையச் சொல்றாளா இல்லை பொய் சொல்றாளா?" "உண்மையத்தான் சொல்றா" – இது நான். "அப்ப மேகா ஏன் அந்த விடுதிக்குப் போனா?" "கண்ணா, எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு. அந்தப் பொண்ணு மேகாவுக்கு மர்மங்கள் மேல ஒரு தனி பிரியம். பைத்தியம்னு கூட சொல்லலாம். தன்னை யாரோ ஃபாலோ பண்றதா கற்பனை பண்ணிண்டிருக்கா. மத்தவங்களையும் நம்ப வச்சிருக்கா. தான் ஏதோ ஒரு மர்மக் கதை ஹீரோயின்னு நெனச்சிண்டு இப்படி விடுதியில போய் உட்கார்ந்த்து தனக்குத் தானே ஒரு சஸ்பென்ஸ உண்டு பண்ணியிருக்கா. அதுல அவளுக்கு ஒரு திருப்தி. அவ்வளவுதான். அவகிட்ட வேற ஏதும் மர்மம் இருக்றதா எனக்கு தோணல" "நிஜமாவா?" "நிச்சயமா!" அவன் மீண்டும் அந்த நோட்டை எடுத்து அவள் முகத்தைப் பார்த்தான். அவள் இன்னும் விளங்காத புதிராக அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
* * * * *

இனி நானும் ஒரு கிராஜுவேட்டாக்கும்!

May 8th, 2005       12 comments

கடைசியில் ஒரு வழியாக, என்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மிகுந்த ஆரவாரம், மேளதாளம், பாராட்டுகள், பரிசுகள், கூத்து, பாட்டு என்று கல்லூரியே அமர்க்களப்பட்டு விட்டது என்று சொன்னால், அது சத்தியமாகப் பொய்தான். நான்கு ஆண்டுகளில் இதுவரை எழுதிய அறுபது பேப்பர்களில், கட்டக்கடைசியான பேப்பரை முடித்த நிறைவோடு, அதன் சாதக-பாதகங்களை டிஸ்கஸ் செய்துகொண்டே, நண்ப-நண்பிகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, வீட்டுக்கு வந்தாகிவிட்டது. ஸ்ட்யூடண்ட் வாழ்க்கையிலிருந்து, க்ராஜுவேட் வாழ்க்கைக்கு இப்பொழுதுதான் ப்ரொமோட் ஆகியிருக்கிறதால், இந்தப் புதிய அவதாரத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகள் இன்னும் பிடிபட்டபாடில்லை. காலை வேளை ‘கொக்கரக்கோ’கள் காதில் விழ வாய்ப்பு தராமல் தூங்குகிற காரியத்தை எத்தனை நாள் செய்துகொண்டிருக்க முடியும்? நண்பர்களிடம், “உருப்படியா என்னடா செய்றதா உத்தேசம்?” என்று கேட்டு, “இனிமேல் தான்டா யோசிக்கணும்”, என்பதையே எல்லோரிடமும் நித்தியமான பதிலாகப் பெற்று பெற்று அலுத்தாகிவிட்டது. என்ன பெரிதாக மாறிவிடப் போகிறது? இனி முடிதிருத்தகத்தில் சவரக்கார அண்ணாச்சி, “என்ன தம்பி, காலேஜ் லீவா?” என்று சிரத்தையோடு விசாரிக்கும் போது, “காலேஜா? அப்டீன்னா?”, என்று தெனாவட்டாகக் கூறி, சட்டைக் காலரை உயர்த்திக் கொள்ளலாம். மிகுந்த சுவாரஸ்யமான அட்வென்ச்சர் கேமை காலை 8 மணியிலிருந்து தொடர்ந்து ஆடி, மிடில் ஸ்டேஜில் மாட்டித் திக்குமுக்காடுகிற சமயத்தில், கடமைக்கார நண்பன் ஃபோன் செய்து, செல்லுலர் கம்யூனோகேஷன் பற்றியும் சாம்பிளிங் ரேட் பற்றியும் விசாரிக்கும் தொல்லைகள் இன்றி வாழலாம் (ஆடலாம்). கல்லூரி முடிந்துவிட்டபடியால், வெட்டிக்கதை பேசும் போது, சிடுமூஞ்சி புரொஃபசர், ஸீன் போடும் ஃபிகர், அக்கிரமமான அடெண்டன்ஸ் இன்சார்ஜ் போன்ற ருட்டீன் சமாசாரங்கள் தீர்ந்துபோய்விட, அரற்றுவதற்குப் புதிய விஷயங்களைத் தேடி, யாஹூவையும் கூகிளையும் நாடலாம். “ஐ அம் வெரி பிஸி”, என்று அலட்டிக் கொண்டு, ஈ-மெயில் மூலமாக மட்டுமே தொடர்பு வைத்திருந்த எதிர் வீட்டு பாஸ்கரையும், அடுத்தத் தெரு ஆண்டனியையும், ரொம்ப காலத்திற்குப் பிறகு நேரில் சந்தித்துக் குசலம் விசாரிக்கலாம். இனி வரப்போகிற ஒன்றிரண்டு மாதங்களை எப்படிக் கழிப்பது என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் காரிடரில் நின்று, வழிந்துகொண்டு ஸைட் அடித்த பெண்கள் மொத்தம் எத்தனை என்று கணக்கெடுப்பு நடத்தலாம். அந்த கம்ப்யூட்டர் ஸயன்ஸ் ஷில்பாவும், எலெக்ட்ரிக்கல் மோஹனாவும் என்றாவது ஒரு நாள் வந்து, “நீ இல்லாமல் வாழவே முடியாது”, என்று உருகுவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களை நினைத்துக் கொண்டு கவிதை வடிக்கலாம். ஹெய்சன்பர்க் தத்துவத்தில் வருகிற எலெக்ட்ரான்கள் போல, பாவம் அந்த யுவதிகள் : எத்தனைப் பேரின் கனவுகளில்தான் ஒரே சமயத்தில் தோன்றுவார்களோ தெரியவில்லை. சீ சீ, அசிங்கம் என்று பட்டால், இருக்கவே இருக்கிறது கணிப்பொறி கோர்ஸ்கள். நானும் கம்ப்யூட்டர் படிக்கப் போகிறேன் என்று தம்பட்டமிட்டு அறிவித்து, NIIT-யா, சிஎஸ்சியா, ஆப்டெக்கா என்று சம்பிரதாயத்துக்குப் பெயர்களில் மட்டும் வித்தியாசப்படும் நிறுவனங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது விளங்காமல் சாஸ்வதமாகத் தேடிக்கொண்டே இருக்கலாம். நன்றாகப் பொழுது போகும். இறுதியில், வீட்டில் ஸெல்ஃப் ஸ்டடி செய்வது தான் உசிதம் என்று எவனோ கூற, ‘லேர்ன் இன் 21 டேஸ்’ என்று போட்ட தலையணை புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்து அழகு பார்க்கலாம். எதுவுமே சரிபட்டு வராமல், என்ன செய்வது என்பதே விளங்காமல், வெறுத்துப் போன

வர்களுக்கு என்றே உருவாகியுள்ளது – கடைசி அடைக்கலமாக வருகிற யோகா கிளாஸ்; அதனோடு சேர்ந்து அடிபடும் மெடிட்டேஷன், ஆர்ட் ஆஃப் லிவிங், இத்யாதிகள். “இந்த ஹாலிடேஸ்ல உருப்படியா, முறையா யோகா கத்துக்கப் போறேன்டா” என்று டயலாக் விட்டுப் போயிருக்கும் நண்பர்கள் எல்லோரும், ‘எதுவும் செய்யாமல் வெட்டியாக இருக்கிறானே’ என்று தன் இமேஜ் பாதிக்கப்படக் கூடாது என்று யோகாவிற்குப் போகிற எக்ஸிபிஷனிஷ்டுகள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மையான யோகா அபிமானிகள் இதைப் படித்தால் மன்னிப்பார்களாக! இன்னும், கதை எழுதுகிறேன், நாடகம் போடுகிறேன், வெரைட்டி ப்ரோக்ராம் கொடுக்கிறேன், வெப் டிஸைன் செய்கிறேன் என்று சித்தம் கலங்கிக் கொக்கரிக்கும் என் போன்ற ஜென்மங்களைத் திருத்த யாரேனும் சாக்ரட்டீஸ் வருவாரா தெரியவில்லை. கிராஜுவேட் வாழ்க்கையின் axiom-கள் விளங்க இன்னும் கொஞ்சம் நாளாகும். கேரளாவுக்கும், சவுதிக்கும், நார்த்துக்கும் ரெஸ்ட் எடுக்கப் போன நண்பர்கள் திரும்பி வந்து, ELT, ட்ரெய்னிங், CBT என்று காக்னிஸன்ட்டில் அடுத்த பரிமாணத்திற்குப் பிரயாணமாகும் வரை இந்தத் தேடல்கள் அரற்றல்கள், அலுப்புகள் தொடரும்…

  • The Author

    DEEPAK VENKATESAN

    A Bangalore-based blogger, amateur photographer, engineer, traveler, bird-watcher, cartoonist, designer, stage-performer, and a good cook.
    Know more!

  • Indiblogger Points (Higher the better)

  • I said this on Twitter

  • What the readers feel?

    • MM: oolaalaa…wow…sound s like a nice adventure…
    • varundbest: I always visit your blog and retrieve everything you post here but I never commented but today when I saw...
    • Hemanth: good article…. I too did the yes!+ course…….Definitel y it is a good course and art of...
    • MM: Haha hilarious….good read…and good luck with the search…
    • Suchindra: I have bought a e-stamp, but the deal could not go through. Am left with a e-stamp with names of the...
  • My Random Photos

    More
  • Topics

  • Attic

  • Still not in the Attic