Amusingly Simple

A blog by Deepak Venkatesan

Archive for March, 2005

எனக்கு ‘நீலா’ வேண்டும்!

one comment

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எனது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் சிருங்கேரி சென்றிருந்தேன். அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எனக்கு, கோடை விடுமுறையில் ஊருக்குச் செல்வதென்றால் ஒரே கொண்டாட்டம் தான். ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருந்த அந்தச் சிறிய ஊரில் எங்கு பார்த்தாலும் வயலும் வரப்பும் வாய்க்காலுமாய் இருக்கும். நண்பர்களோடு ஆற்றில் குளிப்பது, காட்டில் அலைவது, சந்தைக்குச் செல்வது என்று பொழுது போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்போம். சரியான சாப்பாட்டு ராமனான எனக்கு, அத்தை விதம் விதமாகப் பலகாரங்கள் செய்து கொப்டுபார்கள். நானும் பொழுது தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன். மாட்டுத் தொழுவம், காப்பித் தோட்டம், தென்னந்தோப்பு என்று ஒரு ideal கிராமத்திற்கான எல்லா விஷயங்களும் உண்டு அந்த ஊரில். பொதுவாகவே ஊருக்குச் செல்லும் போது எனக்கு ஒரு பிரச்சனை இருக்கும். நான் அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்தவனானாலும், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அதனால் சென்னை செந்தமிழ் சரளமாகப் பேசத் தெரிந்த எனக்கு கன்னடம் சற்று உதைக்கும். தினமும் வீட்டில் பேசுவது கன்னடம் தான் என்றாலும், அந்த கிராமத்திற்குச் சென்று, அவர்களின் slang-கைப் புரிந்துகொண்டு பேசுவது கடினமாக இருந்தது. எப்படியோ இரண்டொரு நாட்களில் கன்னடம் பழகிவிட்டது. வருவோர் போவோரிடத்தில் எல்லாம் அந்த ஊர் slang-கிலேயே பேசி அசத்தலாய்ப் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். எங்கள் அத்தையின் வீடு அந்த ஊரிலேயே இருந்த பெரிய வீடுகளில் ஒன்று. பல அறைகளைக் கொண்ட அந்த வீடு ஒரு maze மாதிரி இருக்கும். ஒவ்வொரு அறையையும் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நாள் வீட்டில், நான் பசுங்கன்று ஒன்றோடு விளையாடிக் கொண்டிருந்த சமயம். என் அத்தை, வீட்டின் பின்புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் என் அத்தை என்னைக் கூப்பிடும் குரல் கேட்டது. நானும் ஓடிச் சென்றேன். துணிகளுக்குப் போடும் நீலம் தீர்ந்துவிட்டது என்று சொல்லி, என்னைப் பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போய் நீலம் வாங்கி வரச் சொன்னார். என் அத்தையும் சென்னையில் வளர்ந்தவர் என்பதால் என்னிடத்தில் தமிழில் தான் பேசுவார். நீலம் வாங்கி வரச் சொன்னதும், நானும் மண்டையை நன்றாக ஆட்டினேன். நீலத்திற்கு கன்னடத்தில் ‘நீலி’ என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அது தெரியாது. விளையாட்டு கவனத்தில் அத்தையிடமும் கேட்க மறந்துவிட்டேன். என் அத்தையிடத்தில் பணம் வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் அந்த மளிகைக் கடைக்குப் போனேன். பொதுவாக, தமிழில் ‘அம்’ விகுதி பெறும் வார்த்தைகளுக்கு, அந்த ‘அம்’ விகுதியை எடுத்து விட்டால், கன்னடமாகிவிடும். உதாரணமாக, தமிழில் ‘காரியம்’ என்றால், கன்னடத்தில் ‘கார்யா’, தமிழில் ‘சாகசம்’ என்றால், கன்னடத்தில் ‘சாஹ்சா’ – இப்படி. இந்த வகையில், நீலத்திற்குக் கன்னடத்தில் ‘நீலா’ என்று தீமானித்துக் கொண்டேன். நேராகக் கடைக்காரரிடம் சென்றேன். இரண்டு ரூபாய்க்கு ‘நீலா’ கொடுங்கள் என்றேன். (கன்னடத்தில், ‘எரடு ருப்பாய்கே நீலா கொடி’). கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். மறுபடியும் கடைக்காரரிடம் ‘நீலா’ வேண்டும் என்று கேட்டேன். இதற்குள், அந்தக் கடைக்காரர் கெகெகே… என்று சிரிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மறுபடியும் ‘நீலா’ கேட்டேன். ஆனால் அவர் சிரித்து முடித்தபாடில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து போய் வீட்டிற்கு வந்துவிட்டேன். வீட்டில் அத்தையிடம் வந்து நடந்ததைச் சொன்னேன். உடனே அத்தையும் சிரிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு
ன்றும் புரியாமல் நின்றேன். அதற்குப் பிறகு என் அத்தை விஷயத்தைக் கூறிய பிறகு தான் எனக்கே தெரிந்தது. உண்மையில் ‘நீலா’ என்பது, sorry, நீலா என்பவள், கன்னட சினிமாவில் ஒரு பிரபலமான கவர்ச்சி நடிகையாம். துணிக்குப் போடும் நீலத்திற்குக் கன்னடத்தில் ‘நீலி’ என்று கேட்க வேண்டுமாம். நான் போய் கடைக்காரரிடம் ‘நீலா’ வேண்டும் என்று சொன்ன போது அவர் என்ன நினைத்திருப்பார் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள். இங்கே ஒரு கடைக்குப் போய் ‘எனக்கு மும்தாஜ் வேண்டும்’ என்று கேட்பதைப் போல இருந்திருக்கும். இன்றும் என் அத்தை ‘என்ன தீபு, உனக்கு நீலா வேண்டுமா?’ என்று கேட்டுக் கலாய்ப்பார்கள். இன்றுவரை எந்த மொழியையும் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு சீன் போடும் நான் யாரிடத்தில் என்னவெல்லாம் கேட்கப் போகிறேனோ தெரியவில்லை… ஈஷ்வரா!!

Written by Deepak

March 12th, 2005 at 4:02 pm

நான் செல்லரித்துப் போன கதை

3 comments

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எனக்கு ஒரு சின்ன ஆசை. ஒரு மாடர்ன் பிகருக்கு பிராக்கட் போட வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் கூடச் சுலபமாக நிறைவேறியிருக்கும். ஆனால் நான் ஆசைப்பட்ட விஷயம் அவ்வளவு எளிதானதல்ல. அது என்ன ஆசை என்கிறீர்களா? வேறொன்றுமில்லை… ஒரு செல்லுலர் போன் வாங்க வேண்டும் என்ற ஆசை தான் எனக்கு.

வெற்று டாம்பீகம் எதற்கு என்று அடக்கமாக இருந்த எனக்கு, எல்லோரும் செல் வைத்துக்கொண்டு, காற்றோடு கதைபேசுவதைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் ஒரு செல் வாங்கினால் நன்றாக இருக்குமே என்று தோன்றத் தொடங்கியது. அப்போது தெரியவில்லை… ஏழரை சனி எனக்கு ஆரம்பித்து விட்டது என்று!

சரி என்று ஒரு சாதாரண Nokia செல்பேசி ஒன்று வாங்கினேன். அதுவரை செல்லில் பேசி அறியாத எனக்கு, செல்லைக் காதருகே வைத்துக் கொண்டு காற்றில் பேசினாலே போதும் என்று அப்போது தெரியாது. நாம் பேசுவது எங்கே மறுமுனையில் இருப்பவருக்குக் கேட்காமல் போகுமோ என்று, தெருக்கோடி அரசியல்வாதி போல் கத்திக் கத்தி நான் பேச, வீட்டில், பேருந்தில், சாலையில், ரெஸ்டரண்ட்டில் என்று எல்லோரும் என்னை ஒரு விசித்திரமான ஜந்துவைப் போல் பார்க்க ஆரம்பித்தார்கள். அதிநாகரிகச் சமூகத்தில் நான் அநாதையாகி போனதுபோல ஒரு பீலிங் எனக்கு.

அதை எப்படியோ சுதாரித்து, சரியாகப் பேசப் பழகிக்கொண்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் வந்தது SMS. அரை நிமிடத்திற்கு ஒரு முறை டொய்ங்… டொய்ங்… என்று அலறிக் கொண்டு, நட்பின் ஆழத்தை, காதலின் புனிதத்தை, இன்னும் புலப்படாத எத்தனையோ தத்துவார்த்த போதனைகளை அள்ளிக் கொடுத்தனர் நண்பர்கள். நண்பர்களின் SMS மழையில் நனைந்து, நீராடி, நீந்தித் திளைத்து, ஜலதோஷம் பிடிக்காத குறைதான். அர்த்த ராத்திரியில் கூட அடங்க மாட்டேன் என்று அடம் பிடித்தார்கள் நண்பர்கள். மேலே இருப்பவன் மேல் பாரத்தைப் போட்டு, எல்லாம் அவன் செயல் என்று அடக்கமாக அங்கலாய்த்துக் கொண்டேன்.

செல்பேசி வாங்கியாச்சு, எல்லாம் முடிஞ்சாச்சு என்று dormancy-க்குள் போக நினைத்த எனக்கு புதிய தலைவலிகள் காத்திருக்கின்றன என்று அப்போது தெரியாது. ஒரு நன்னாளில், விடிந்ததும் விடியாததுமாக என் நண்பன் என்னைத் தேடி வந்தான். ‘டேய் நான் கலர் மொபைல் வாங்கிட்டேன்’ என்று உள்ளம் குளிர, நா நெகிழ, என்னிடம் கூறினான். அவனின் புதிய சொத்தைக் கையில் வாங்கி, அதன் அழகான பொத்தான்களைப் பிரஸ்ஸிப் பார்த்த போது, லேசாக அதன் மேல் காதல் மலரத் தொடங்கியது. வீட்டு முகப்பில் கட்டியுள்ள திருஷ்திப் பூசணி போல என் செல் என்னைப் பார்க்கத் தொடங்கியது.

கலர் செல் மேல் ஏற்பட்ட காதலை வளர்த்துக் கலியாணமாக்கலாம் என்று plan பண்ணிக் கொண்டிருந்த சமயம், இன்னொரு நண்பன் ஓடோடி வந்தான். GSM டா, GPRS டா, என்று நான் கல்லூரியில் digital communication வகுப்பில் அரைத் தூக்கத்தில் கேட்ட jargon-களைச் சொல்லி என்னை பயமுறுத்தினான். என் உருவத்தை அவனின் செல் காமிராவில் பிடித்து, திரையில் கைது செய்து, ஆரவாரித்தான். அழகான பிகர்களைப் பார்த்து ஜொள்ளு விடும் விடலை போல நானும், செல்லுலாரின் சரித்திரத்தில் இத்தனை முன்னேற்றமா என்று நினைத்துப் பெருமூச்சு விட்டேன்.

ஓகே, அதையாவது வாங்கினேனா என்றால், அதுதான் இல்லை. ஒரு நாள், கடற்கரை – திருமயிலை பறக்கும் இரயிலில் பயணித்த போது, ஒரு ஹீரோ, சுற்றியிருந்த பிகர்களுக்குத் தன் செல்லில் இருந்து, பின்தெருப் பசங்க (அதாங்க Backstreet Boys) ஆல்பம் பாடலை mp3-யில் ஒலிபரப்பி, சேவித்துக் கொண்டிருந்தான். இன்னொரு கூட்டம், யாருடைய செல்லில் அதிக நேரம் வீடியோ ஓடும் என்று பட்டி மன்றித்துக் கொண்டிருந்தார்கள்.

இனி பொறுப்பதில்லை தம்பி, என்று உடனே அன்றைய தேதியில் சகல feature-களும் கொண்ட state-of-the-art செல்பேசியை வாங்கி வந்தேன். சொல்லியடங்காத மகிழ்ச்சி எனக்கு. பாட்டு கேட்கலாம், படம் பார்க்கலாம், SMS அனுப்பலாம், MMS அனுப்பலாம், GPRS உண்டு, ரேடியோ-mp3 player உண்டு, infra-red, bluetooth என்று வண்ண வண்ணமான தொழில்நுட்பங்கள் வேறு. ‘நான் தன்னந்தனிக் காட்டு ராஜா’ என்று எனக்குப் பிடித்த சிவாஜி பாடலை முணுமுணுத்துக் கொண்டே உலா வந்தேன்.

இன்று ஒரு மாசமாகிறது. டிவியில் படம் பார்க்கிறேன், பிளேயரில் பாட்டு கேட்கிறேன், காமிராவில் புகைப்படம் எடுக்கிறேன், கணினியில் இணைய உலா வருகிறேன். செல்பேசி மட்டும் கேட்பாரின்றிச் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது.

Written by Deepak

March 10th, 2005 at 2:39 pm

வந்துட்டான்யா வந்துட்டான்யா…

leave a comment

நேற்று காலையில் 'தினமணி' படிக்கும் போது, மதியின் 'அடடே!' column கண்ணில் பட்டது. இப்பத்தான்யா பீஹார் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொடுக்காமல் விட்டிருக்கிறார்கள் – குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்திருக்கிறது. அவர் தான் பீஹாருக்குச் சரியான ஆள் – என்று இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பது போல cartoon போட்டிருந்தார். அதுவும் வாஸ்தவம் தான். எங்களைத் தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று லாலு, பாஸ்வான், பாஜக என்று எல்லோருமே கவர்னரை வேண்ட, கடைசியில் ஆட்சி அமைத்ததோ குடியரசுத் தலைவர் தான். ஒழுங்கான ஆட்சி அமைந்த மத்தியிலும் மாநிலத்திலும் மன்றங்கள் எப்படி நடக்கின்றன என்பது நாடறிந்த விஷயம். நாங்கள் சொல்வதைச் செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தையே நடத்த விட மாட்டோம் என்று ஒரு கட்சி முழங்குகிறது. கடைசியில் நஷ்டப்படப் போவது யார்? மக்கள் தானே? ஜனநாயகத்தில் எல்லோருமே மன்னர்கள். மன்னர்களின் அட்டகாசம் தாங்கமுடியலைப்பா…! கடவுளே, மன்னர்கள் இருக்கட்டும். மக்களை யாராவது காப்பாற்றுங்களேன்!

Related Posts with Thumbnails

Written by Deepak

March 9th, 2005 at 10:42 pm