சில முயற்சிகள்…

March 19th, 2005       4 comments

எனது நண்பர் கவிஞர் புரட்சித்தேனீ எழுதிய கவிதை ஒன்றில் இந்த வரிகள். நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று யாரும் வீட்டில் நரி வளர்ப்பதில்லை. பூனை குறுக்கே சென்றால் ஆபத்து என்று யாரும் வீட்டில் பூனை வளர்க்கத் தயங்குவதில்லை. விசாரித்துப் பார்த்ததில், தம்மிடம் யாரோ சொன்னதாகச் சொன்னார். இருந்தாலும், தினம் தினம் இப்படிப்பட்ட ஹாஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை. நாமெல்லாம் எந்த அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறோம் என்பது எனக்கு இன்னும் விளங்கியபாடில்லை. அமாவாசை அன்று காக்கைக்குப் படையல் வைக்க ஒரு கூட்டம் அலைமோதும். காக்கை சாப்பிட்ட பின்னால் தான் எனக்கு சாப்பாடு என்று அம்மா கண்டிப்பாகக் கூறுவாள். எல்லா நாளும் சுற்றிச் சுற்றி வரும் காக்கைகள் அன்று மட்டும் குடும்பத்துடன் கிஷ்கிந்தா போய் விடுமோ என்னவோ தெரியாது. கா…கா… என்று மனிதக் காகங்களின் ஒலிதான் மலிந்திருக்கும். காக்கை உன்னிடம் வடையும் பாயசமுமா கேட்டது? ஒரு மீன் துண்டைப் போட்டால், எல்லா காக்கைகளும் வீட்டின் முன் ஆஜர் என்று வாழ்வியல் உண்மையைச் சொன்னால், அம்மா முறைப்பாள். பாவம் அவை எத்தனை வீடுகளில் தான் தரிசனம் தருவது? எத்தனையோ முறை, வெயிலில் வடகம் காய வைக்கும் போது, இதே காக்கையை விரட்ட கையில் கருப்புக் குடையுடன் காவல் காத்த ஞாபகங்கள். அதற்கெல்லாம் சேர்த்துத் தான் காக்கைகள் சங்கத்தில் முடிவெடுத்துப் பழிவாங்குகின்றனவோ என்னவோ, என்பேன். தம் பவரைக் காட்ட ஒரு நாள் தானே கிடைக்கிறது அவற்றிற்கு. எப்போதும் என் அறையின் ஜன்னலுக்கு வெளியே காதலும் கரைதலுமாக இருக்கும் ஜோடிக் காகங்கள் கூட அமாவாசை அன்று அப்பீட்டாகி விடும். காக்கை சாப்பிட்டதா இல்லையா என்று மறைந்திருந்து கண்காணிக்க என் தம்பியை appoint பண்ணிவிட்டு நான் நைசாக ஜகா வாங்கிக் கொள்வேன் – வடைக்காக. நம்மூரில் வாக்குகளுக்காகக் கஞ்சித் தொட்டிகள் – அமாவாசைக்காகக் காக்கைகளுக்கு விருந்து. Funny! எனக்குக் கவிதை எழுத வராது. என்றாலும் கஷ்டப்பட்டு எழுத முயல்வேன். எதையும் வற்புறுத்திச் செய்ய வைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. விட்டுவிட்டேன். எங்கோ படித்ததாக ஞாபகம் – நல்ல இலக்கியம் உண்மையான உணர்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்டு உருவாகிறது. கவலையே இல்லாமல் காலம் தள்ளுகிறவனுக்கு இலக்கியம் எட்டாக்கனி. எனக்கு, ப்ராஜக்டையும் அசைன்மென்ட்களையும் எக்ஸாமையும் தாண்டிக் கவலைகள் இல்லை. கவிதையும் வரவில்லை. நண்பர்கள் பலருக்கு காதலிதான் இன்ஸ்பிரேஷன். காதல் என்று சொன்னதும் எப்படித்தான் கவிதை வருகிறது என்பது எனக்குப் புரியாத புதிர்தான். எனக்கும் காதலுக்கும் கொஞ்சம் தூரம். காதல் என்பது ஓவர் ரியாக்டிவ் சென்டிமெண்ட் என்று கமெண்ட் செய்ததுண்டு. ஒரு வேளை நானும் காதலித்தால், கருத்தை மாற்றிக் கொள்ளலாம். அவ்வளவு stubborn ஆனது இல்லை. இந்திய ஜனாதிபதியாகப் போகிறவர் கலாம் என்ற தமிழர் என்று அறிவிக்கப்பட்ட போது, அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் கிளம்பியது. கவிதைகள் படையெடுத்தன. அடியேனும் கவிதை வார்த்து, வகுப்பில் வாசித்தேன். சில வரிகள் நினைவில் உள்ளது. நானும் பொறியாளன், நீயும் பொறியாளன். நான் வெறும் பொறியாளன், நீ தீப்'பொறியாளன்.' உன் தீப்பொறியில் பிறந்தவைதான் அக்கினிச் சிறகுகள், எழுச்சி தீபங்கள். அதன் பிறகு, நமக்கெதுக்கு வம்பு என்று கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். நண்பர்களோடு எப்போதாவது கவிதை மன்றங்களுக்குப் போய் கவிதை வாசிப்பைக் கேட்பதோடு சரி. கல்லூரியிலிருந்து ஒரு பேச்சுப் போட்டிக்கு அனுப்பியிருந்தார்கள். நண்பனோடுப் போயிருந்தேன். திநகர் வெங்கட்நாராயணா ரோட்டில். எப்போதும் பார்க்கும் பழகிய முகங்கள். கவி�
��ைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். (வாசிக்கச் சொல்லாத வரையில் எனக்குப் பிரச்சனை இல்லை). கவிஞனின் வேகத்திற்குத் தடை போடக் கூடாது, சென்சார் பண்ணக் கூடாது என்று நண்பர் பழனி (பத்திரிகையாளர்) விவாதித்துக் கொண்டிருந்தார். நண்பர் கவிஞர் பாரதிபாபு எழுதிய ஒரு கவிதை, நம் சேரிக் குழந்தைகளின் பரட்டைத் தலையில் எண்ணெய் இல்லை பரவாயில்லை – நம் அரசியல்வாதிகள் பலரின் தலையில் மூளையே இல்லை ஒரு அரங்கில் இந்தக் கவிதையை வாசித்து மாட்டிக் கொண்டாராம். பாரதி எழுதுகிற கவிதைகள் எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நண்பர் கூற, இடையே வந்து அரைகுறையாகக் கேட்ட என் நண்பன், 'ஆமாம், ஆனால் பாவம் சிறு வயதிலேயே இறந்து போய்விட்டார்' – என்று சுப்பிரமணிய பாரதியாரை நினைத்துச் சொல்ல, 'அய்யய்யோ, அப்படியா, ரெண்டு நாட்களுக்கு முன்னால் தானே பார்த்தேன்' என்று அவர் சொல்ல, 'ஓ நீங்கள் பாரதிபாபுவைச் சொல்கிறீர்களா?' என்று என் நண்பன் சமாளிக்க, கொல்லென்ற சிரிப்பில் அரங்கம் அதிர்ந்தது. நான் மேடையில் பேசுவதைக் கேட்டு, நீங்கள் இலங்கைத் தமிழரா? என்று அடிக்கடிப் பலரும் கேட்பதுண்டு. நான் தமிழனே இல்லை, என் தாய்மொழி கன்னடம் என்று நான் சொன்னவுடன், எதையோ பார்த்தது போல் அவர்களின் முகம் மாறிவிடும். அய்யோ, காவிரியில் தண்ணீர் வராததற்கு நான் பொறுப்பில்லை என்று சொல்லி நகர்ந்துவிடுவேன். தண்ணீர்ப் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக்கப்பட்டு, இப்போது மொழிப் பிரச்சனையாக mutate ஆகியுள்ளது. இன்னும் என்னவெல்லாம் ஆகப் போகிறதோ தெரியவில்லை. இந்தியத் தாயே, ஹவாலாவில் நூறு கோடி அன்னியச் செலாவணியில் அய்ந்நூறு கோடி என்று எல்லோரும் சேர்ந்து உன்னைத் திவாலாக்கிவிட்ட போதும், தாய் தானே, மன்னிக்க மாட்டாயா? என்று நண்பர் புரட்சித்தேனீ எழுதியிருந்தார், இன்னொரு கவிதையில். எல்லாம் நம்ம வசதிதான். 'தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை – மன்னிப்பு' என்று சொல்லும் நிஜ வாழ்க்கை ரமணா யாரும் இல்லையே என்ற ஒரு வருத்தம் தான் எனக்கு.

கேட்டுக்க மச்சி…

March 16th, 2005       0 comments

மூச்சு விடாமல் பாடுபவர்களுக்கு நம்மூரில் என்றுமே மவுசு உண்டு. டிஜிட்டலில் குரல்களைச் செதுக்கும் இக்காலத்தில் மூச்சு விடாமல் பாடுவது ஒன்றும் மலையை நகர்த்துகிற செயல் இல்லைதான். இருந்தாலும் பள்ளியில் படித்த சமயம், நண்பன் ஒருவன் SPB போல மூச்சு விடாமல் பாடி அரங்கில் கைத்தட்டல் வாங்கிய போது, என் வயிறு அண்ணாமலை தீபம் மாதிரி சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஷங்கர் மஹாதேவனின் Breathless வரிகள் அனைத்தும் எனக்கு அத்துப்படிடா என்று பீத்திக் கொள்வான் இன்னொருவன். (அடியேன் கல்லூரி முதலாம் ஆண்டில் மேடையில் ஏறி தேவகானம் பாட, சீனியர்கள் காலில் விழாத குறையாக, "தயவு செஞ்சி இனிமே பாடாதெப்பா… உனக்குக் கோடி புண்ணியம்!" என்று என்னிடம் வாக்குறுதி பெற்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?) மூச்சு விடாமல் பாடுபவர்கள் ஒரு ரகம் என்றால், மூச்சு விடாமல் பேசுபவர்கள் இன்னொரு ரகம். சமீப காலமாக சென்னையில் ஒலிபரப்பாகிற FM அலைவரிசைகளின் கைவரிசைகள்… தமிழை ஒரு புதிய dimension-னுக்குள் அழைத்துச் (இழுத்து) சென்றுகொண்டிருக்கின்றன. யார் கண்டார்? மதுரை தமிழ், கோவை தமிழ், நெல்லை தமிழ், சென்னை செந்தமிழ் மாதிரி ரேடியோ தனித்தமிழ் : 'இது செம ஹாட் மச்சி' – என்று மாடர்னாக ஸ்லோகனுடன் கூடிய ஒரு புது தமிழே கூட வரலாம். சென்னை வானொலி நிலையம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பாக இருந்த காலம் முதல் வானொலியின் ரசிகன் நான். ரேடியோ antenna-வின் நுனியைப் பிடித்து இழுத்தால், ரேடியோவைப் போல் நாலு மடங்கு தூரத்திற்கு antenna வெளியில் நீண்டு வரும். அதை இரண்டு முழம் அளவுக்கு நீட்டி வைத்து ட்யூன் செய்தால், ஸ்ஸ்ஸ்…. என்ற சப்தத்துக்கு இடையிடையே ரொம்ப சிரமப்பட்டு சென்னை எஃப் எம் எடுக்கும். ப்ரியா விஷன் பிரியமான நேரம், VRG நேரம் என்று ஒரு நேரப் பட்டாளமே உண்டு. அதெல்லாம் ஒரு காலம்… இன்று பாக்கெட் ரேடியோவை ஆன் செய்தாலே போதும். கத்திபராவுல traffic ஸ்லோவா மூவ் ஆயிட்டிருக்கு, கோயம்பேட்டுல லேசா தூறிக்கிட்டிருக்கு, அடையாறுல டிஸ்கவுண்ட் சேல்…' என்று சென்னை நகரமே பாக்கெட்டில்! சுருக்கமாகச் சொன்னால், இப்போதைக்கு சென்னையில் FM ரேடியோ தான் GPS. இன்று காலையில் எதேச்சையாக ரேடியோ மிர்ச்சிக்கு ட்யூன் செய்தேன். மின்னல் வேகத்தில் பேசிய பீட்டர் யுவதியைக் கஷ்டப்பட்டு follow பண்ணிய எனக்கு, போதி மரத்தடி புத்தர் மாதிரி திடீரென்று ஞானோதயம் ஆனது. 'அடங்கொயாலு! இவ பேசற்து தமிழ் தான்டா!!!' என்று எனக்கே ஞானோபதேசம் செய்து கொண்டேன். என்ன பேசுகிறாள் என்று உன்னிப்பாகக் கவனித்தேன். ஒரு பொது அறிவுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக, கேள்விக்கு விடையளிக்க choice இருந்தது. இதுதான் கேள்வி: நம்ம MTC பஸ்களால் (சென்னை மாநகரப் பேருந்து) மக்களுக்கு என்ன நன்மை? (a) காலையில் நல்ல உடற்பயிற்சி ஆவதற்கு உதவுகிறது (b) மதிய வேளையில் படுத்து உறங்குவதற்கு உதவுகிறது (c) காதலன்/காதலியோடு கடலை போடுவதற்கு உதவுகிறது இதற்கான பதிலை 8888 என்ற எண்ணுக்கு sms பண்ண வேண்டும். இந்த வாக்கெடுப்பு முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்று 2 மணி நேரம் விவாதம், மக்களின் பேட்டி என்று ஒரு மினி பல்கலைக்கழகமாக உருவெடுத்து, களை கட்டியது இன்றைய மிர்ச்சி (செம ஹாட் மச்சி). ரேடியோவில் என்னால் மறக்க முடியாத விஷயம், அந்த RJ பெண்மணின் நிகழ்ச்சித் தொகுப்பு. நம்மூர் மெகா சீரியல்களில் சரக்கடித்து விட்டு, இதுதான் சாக்கு என்று சகட்டு மேனிக்கு உளறித் தீர்க்கும் ஹீரோ தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தார். நாலு சுவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு, எக்ஸ்பிரஸ் வேகத்தில் இம்மியளவு gap-ப்பும் இல்லாமல் பேசிக்கொண்டே இருக்கும் அந்தப் பெண்ணுக்கு ஓ போடலாம். high-யில் பேசுவது போன்ற பாணியை மாற்றின
ல் பரவாயில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ரேடியோ கண்டுபிடித்த மார்கோனி, அதை என்ன காரணத்துக்காகக் கண்டுபிடித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இன்று அந்த ரேடியோ இது போன்ற அறிவை வளர்க்கும் விஷயங்களில் பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர் காலத்தில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள சரியான side dish சட்னியா, சாம்பாரா, மிளகாய்ப் பொடியா, வடைகறியா என்று sms போட்டி வைத்து, பட்டிமன்றம் நடத்திப் பரிசளிப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். பாப்பையா தயாராக இருப்பாராக!

கம்ப்யூட்டரும் கவிதையும்

March 14th, 2005       6 comments

கல்லூரியில் படித்த போது, செயற்கை அறிவு (Artificial Intelligence) தொடர்பாகச் சில விஷயங்கள் படித்து வந்தேன். பொதுவாகவே, அடிப்படைக் கோட்பாடுகளை விட, extraordinary-யான விஷயங்களில் தான் மாணவர்கள் முதலில் மூக்கை நுழைப்பார்கள். அடிப்படைகள் விளங்கியதோ இல்லையோ, அற்புதங்கள் நிகழ்த்திவிட வேண்டும் என்று துடிப்பார்கள். Fuzzy logic, Neural Network, AI என்றால், மாணவர்களுக்கு அது ஒரு கனவுலகம். Fuzzy-யில் எப்படியாவது ஒரு project செய்து விடுவேன் என்று கொள்கை கோஷமிட்டுத் திரிவார்கள். ரிஸர்ச், டெவலப்மெண்ட், கிரியேட்டிவிட்டி, இன்னொவேஷன், புடலங்காய் என்றெல்லாம் ஓவராகப் பீட்டர் விட்டு அலைவார்கள். எல்லாம் final year வரும் வரையில் தான். அதன் பிறகு, எங்காவது போய், யாரையாவது பிடித்து, எப்படியாவது ஒரு project-ட்டை முடித்தால் போதும்டா சாமி என்று அடங்கி விடுவார்கள். (குறிப்பு: நான் சாதாரணப் பொறியியல் மாணவ மாணவியர் பற்றிப் பேசுகிறேன். 'எல்லோரும் அப்படி இல்லை' என்று நிஜமான அறிவுஜீவிகள் யாரும் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள்). மீண்டும் விஷயத்துக்கு வருவோம். இந்த செயற்கை அறிவில் அப்படி என்னத்தான் செய்கிறார்கள்? என்ன மாய்மால வித்தை செய்து கணினிக்கு அறிவூட்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு. இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட MIT பேராசிரியர் மார்வின் மின்ஸ்கி அவர்களுடைய இணையத்தளத்தில் சென்று என் தேடுதல் வேட்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டேன். (பிள்ளையார் சுழியைத் தவிர வேறு எதைப் போட்டேன் என்று கேட்காதீர்கள்). வீரப்பன் காட்டைப் போலப் பரந்து விரிந்திருந்த அவரின் தளத்தில், நானும், அதிரடிப் படை போல ஏதோ ஒரு மூலையில் தடவிக் கொண்டிருந்தேன். மனித மனம் எண்ணங்களைக் கையாளும் விதங்களைத் தாண்டி நான் வேறெதையும் உருப்படியாகப் படித்ததாக ஞாபகம் இல்லை. அதிலேயும், அவர் சொல்லியிருந்த சில விஷயங்கள் வித்தியாசமானதாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தன. கணிப்பொறியால் சிந்திக்க முடியுமா? – என்று பொத்தாம்பொதுவாகக் கேட்டால், ஒரு இயந்திரத்தால் எப்படிச் சிந்திக்க முடியும்? என்று ஒரு சாராரும், நிச்சயமாகக் கணினி ஒரு நாள் சிந்திக்கும் என்று ஒரு சாராரும் சர்வகாலத்திற்கும் விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அண்மையில் எழுத்தாளர் சுஜாதாவின் நூல் ஒன்றில் இக்கவிதையைக் கண்டேன்- "சொல்லடா சிவசாமி – என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் எல்.எஸ்.ஐ. தாராயோ – இந்த இன்டர்நெட் பயனுற வாழ்வதற்கே!" எதிர்காலத்தில் கணினி கவிதைகள் கூட இயற்றும் என்று எழுதியிருந்தார். இனி வரும் கணினி யுகம் குறித்த அவரின் forecast அது.மனிதன் தான் என்ன செய்கிறோம் என்கிற consciousness-உடன் செயல்படுகிறான், ஆனால் ஒரு இயந்திரமான கணினிக்கு இந்த consciousness எப்படி இருக்கும்? "நான் ஒரு கணினி. என்னை உருவாக்கியவர் கந்தசாமி. எனக்குள் 10 மில்லியன் ட்ரான்ஸிஸ்டர்கள் உள்ளன. நான் வெறும் electronic குப்பைகளின் சேர்த்தி தான். ஆனாலும் என்னால் சிந்திக்க முடியும். சிரிக்க முடியும். அழ முடியும். எனக்கும் பீலிங்க்ஸ் இருக்கிறது"- இப்படி ஒரு கணினியால் conscious-ஆகச் சிந்திக்க முடியுமா? – இதற்குப் பேராசிரியர் மின்ஸ்கி ஒரு வித்தியாசமான விளக்கம் தருகிறார். நான் நடக்கிற போது, எனக்குள் பல நூறு தசைகள் இயங்குகிறன. எத்தனையோ நியூரான்கள் ஒன்றோடொன்று கிசுகிசுத்துக் கொள்கின்றன. என் மூளை என் கை கால்களுக்கு எத்தனையோ கட்டளைகச் இடுகிறது. ஆனால், இதெல்லாம் எனக்குத் தெரிகிறதா என்ன? உதாரணத்திற்கு, நான் நேராக நடந்து மார்க்கெட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். வழியில் த்ரிஷாவின் போஸ்டரைப் பார்க்கிறேன். உடனே என் மூளையின் நீள அகலங்களில், நியூரான்களில் பதிந்து வைத
்திருக்கிற த்ரிஷாவின் முகத்தை வெளிக்கொணர்கிறது. எதிரில் இருக்கும் த்ரிஷாவின் போஸ்டரோடு ஒப்பிடுகிறது. டெஸ்ட் ஓகே என்றால், நான் போஸ்டரைப் பார்த்து ஜொள்ளு விடுகிறேன். அது கூட நான் செய்வதில்லை. என் மூளைதான் என் எச்சில் சுரப்பிகளுக்குக் கட்டளையிட்டு செயல்பட வைக்கிறது. (ஓகே ஓகே, இதெல்லாம் சொல்லி டபாய்க்கிறான் பார் என்கிறீர்களா?). மூளை என் கால்களுக்குக் கட்டளையிட, நேராகப் போய்க் கொண்டிருந்த நான், என் கால் தசைகளின் உதவியால் த்ரிஷாவை நோக்கி நடைபோடுகிறேன். "என்னைப் பார்த்துச் சொல்லு, என் கண்ணைப் பார்த்துச் சொல்லு", என்று நம்மூர் முரட்டு ஹீரோ ஸ்டைலில் கேட்கிறேன், இப்படி நீங்கள் யாராவது த்ரிஷாவின் போஸ்டரைப் பார்த்தால் நான் மேலே சொன்ன மூளை சம்பந்தப் பட்ட விஷயங்களை எல்லாம் நினைத்துப் பார்ப்பீர்களா, இல்லை, த்ரிஷாவின் பால் வடியும் அழகு முகத்தை ரசிப்பீர்களா? 'ம்ம்ம்… இப்போது மூளை கைகளுக்குக் கட்டளை இடுகிறது, இப்போது கைகள் மூளைக்கு acknowledgement அனுப்புகின்றன.' இப்படியெல்லாம் சிந்தித்து யாருக்கவது அனுபவம் உண்டா? (இருந்தால் சொல்லுங்கள், நான் உங்களுக்குச் சரியான வழி காட்டுகிறேன்) இப்படி, நம் மூளைக்குள் என்ன நடக்கிறது என்ற விஷயம் நமக்கே தெரிவதில்லை. அதற்காக, நாம் எல்லாம் சிந்திக்கத் தெரியாத முட்டாள்கள் என்று சொல்ல முடியுமா? பின் ஏன் கணிப்பொறிக்கு மட்டும் consciousness தேவை என்கிறீர்கள்? எனவே, கணிப்பொறிக்கு consciousness இருந்தால் தான் அது சிந்திக்கிறது என்பது காதில் பூ சுற்றும் செயல். Consciousness இல்லமலேயே கணினியால் மனிதன் போல் சிந்திக்க முடியும். இதை நான் கூறவில்லை. MIT பேராசிரியர் மின்ஸ்கி கூறுகிறார். சிந்திக்க வேண்டிய விஷயம். அதெல்லாம் இருக்கட்டும். டேட்டா மைனிங், டேட்டா வேர்ஹவுஸிங் என்றெல்லாம் படிக்கிறோம், செயல்படுத்தவும் செய்கிறோம். ஆனால் எங்கள் இறுதியாண்டு project report-ட்டை சி.டி.யில் போட்டுக் கொடுக்கலாமே, எதிர்காலத்தில் reference-க்கு எளிதாக இருக்குமே என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இந்த லட்சணத்தில், கணினி கவிதை இயற்றுவது பற்றியெல்லாம் வேறு பேசிக்கொண்டிருக்கிறோம். இருட்டறையில் உள்ளதடா உலகம்! பேப்பர் பென் யூஸ் பண்றவனும் இருக்கின்றானே!!

  • The Author

    DEEPAK VENKATESAN

    A Bangalore-based blogger, amateur photographer, engineer, traveler, bird-watcher, cartoonist, designer, stage-performer, and a good cook.
    Know more!

  • Indiblogger Points (Higher the better)

  • I said this on Twitter

  • What the readers feel?

    • MM: oolaalaa…wow…sound s like a nice adventure…
    • varundbest: I always visit your blog and retrieve everything you post here but I never commented but today when I saw...
    • Hemanth: good article…. I too did the yes!+ course…….Definitel y it is a good course and art of...
    • MM: Haha hilarious….good read…and good luck with the search…
    • Suchindra: I have bought a e-stamp, but the deal could not go through. Am left with a e-stamp with names of the...
  • My Random Photos

    More
  • Topics

  • Attic

  • Still not in the Attic